GISBH விவகாரத்தில் 500 தடவை தோப்புக் கரணம் போட்டு தண்டிக்கப்பட்ட குழந்தைகள்!
- Muthu Kumar
- 16 Oct, 2024
கோலாலம்பூர், அக். 16 -
குளோபல் இக்வான் அண்டு பிஸ்னஸ் ஹோல்டிங்ஸ் (ஜிஐஎஸ்பிஎச்) நிறுவனத்தின் கீழ் செயல்பட்ட சமூகநல இல்லங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ள சிறுவர்கள் "கட்டொழுங்கு எனும் பெயரில் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.அந்த சிறுவர்கள் அனைவரும் அவர்களின் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்ததும், சிறு தவறு செய்தாலும், 100 தடவையல்ல மாறாக மொத்தம் 500 தடவை தோப்புக் கரணங்களைப் போடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது மக்களவையில் நேற்று அம்பலப்படுத்தப்பட்டது.
போலீசாரால், ஜிஐஎஸ்பிஎச்சுக்கு எதிராக கடந்த மாதம் 11ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட 'ஓப்ஸ் குளோபல்' நடவடிக்கையின் கீழ் அச்சிறுவர்கள் மீட்கப்பட்டபோது, இத்தகைய கொடூரச் செயல்கள் நிகழ்ந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். பல சிறுவர்கள் இரண்டு வயது இருக்கும்போதே அவர்களின் குடும்பத்திடமிருந்து பிரிக்கப்பட்டிருந்ததாகவும் "நடைமுறை பயிற்சி என்ற போலியான காரணத்தின் கீழ் வேலை செய்யுமாறு அச்சிறுவர்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
"அப்போது அவர்கள் ஏதாவது தவறு செய்திருந்தால், உதாரணத்திற்கு வரிசையில் நிற்கும்போது சற்று விலகி நின்றிருந்தாலும் கூட 100 தடவையல்ல. மொத்தமாக 500 தடவை தோப்புக் கரணம் போடுமாறு தண்டிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் சைஃபுடின் கூறினார். 'ஓப்ஸ் குளோபல்' நடவடிக்கையின்போது மொத்தம் 625 சிறுவர்கள் மீட்கப்பட்டதாகவும் அவர்களில் 597 சிறுவர்களுக்கு மட்டும் பிறப்புச் சான்றிதழ்களும்,மைகார்டுகளும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *