பாஜகவிற்கு துணை செல்பவர்கள் மீது திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- Muthu Kumar
- 25 Sep, 2024
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும் போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா என்று பேசியிருந்தது திமுகவினரிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியில் பங்கு என்கிற திருமாவளவனின் பழைய காணொளி வைரலான நிலையில் விசிக கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் திமுக வெல்ல முடியாது என்று ஆதவ் அர்ஜுனா பேசியிருந்ததும் திமுகவினரை அதிர்ச்சியடைய செய்தது. தமிழக அமைச்சரவையில் விசிக, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகளுக்கு இடம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆதவ் அர்ஜுனாவின் பல கருத்துக்கள் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் குறித்து, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், நீலகிரி தொகுதி எம்பியும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா, "மதவாதத்தை ஒழித்து, சமூக நீதியை காப்பதில் திமுகவுடன் தோள் கொடுக்கும் அரசியல் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், அதன் தலைவர் திருமாவளவனும் உள்ளனர். இடதுசாரி சிந்தனையில் இருந்து சிறிதும் வலுவாமல் திருமாவளவன் உள்ளார். இந்தச் சூழலில் இப்படிப்பட்ட ஒரு கருத்தை, அந்தக் கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஒருவர் கொள்கை புரிதல் இன்றி பேசியிருப்பது கூட்டணி அறனுக்கும், அரசியல் அறத்துக்கு ஏற்புடையது அல்ல. விசிக இயக்கத்திற்கு புதிதாக வந்திருக்கும் ஆதவ் அர்ஜுனா, திருமாவளவனின் ஒப்புதலோடு இதனைப் பேசியிருக்க மாட்டார். திருமாவளவன் நிச்சயமாக இந்த கருத்தை ஏற்க மாட்டார். விடுதலைச் சிறுத்தைகளும் இதனை ஏற்க மாட்டார்கள்.
கூட்டணியில் குறைந்தபட்ச செயல் திட்டம் கேட்பது நகைப்புக்குரிய ஒன்று. இப்படி பேசுவது கூட்டணி அறத்திற்கு சரியாகாது. இது போன்ற குழப்பத்தை விளைவிக்கின்ற பாஜகவிற்கு துணை போகிறார்கள் என்று எண்ணக் கூடியவர்கள் மீது திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கட்சியினுடைய துணைப் பொதுச் செயலாளரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழிப்பாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *