ஆட்சியிலும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற திருமாவளவனின் பேச்சு அரசியலில் பரபரப்பு!
- Muthu Kumar
- 15 Sep, 2024
வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது திமுக அரசு.
இதனால் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவையும் அமைத்து சட்டப்பேரவை தேர்தல் பணிகளை திமுக தொடங்கி விட்டது. இதனால் தற்போதுள்ள கூட்டணியை சிதற விடாமல் தற்காத்துக் கொள்ள திமுக விரும்புகிறது. ஆனாலும், மின்கட்டண உயர்வு, போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை உள்ளிட்டவற்றில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளும் திமுக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றது.
திமுக கூட்டணியில் மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக வலம் வருவது தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி. வெறும் கூட்டணி என்பதை தாண்டி கொள்கை ரீதியாகவும் திமுக-விசிக இடையே வலுவான பிணைப்பு உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்கள் திமுகவிடம் இருந்து விசிக பிரிகிறதா? என்ற கேள்வியை அனைவரது மனதிலும் எழுப்பியுள்ளது. இந்த கேள்வியை எழுப்ப முதலில் அச்சாரமிட்டது விசிக தலைவர் தொல்.திருமாவளவளவன் தான்.
அக்டோபர் 2ம் தேதி விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இந்த மது ஒழிப்பு மாநாட்டில் மதவாதக் கட்சியான பாஜக சாதிய கட்சியான பாமக தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்கலாம்.அதிமுகவும் விரும்பினால் பங்கேற்கலாம் என்றும் கூறினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய, நம்பிக்கைக்குரிய சகோதரராக விளங்கி வரும் திருமாவளவன் திடீரென திமுகவுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவகாரம் பெரிதான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த திருமாவளவன் ''மது ஒழிப்பு மாநாட்டுக்கும் கூட்டணிக்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை'' என்று கூறி விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
இதற்கிடையில், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு இறுதி அஞ்சலி செலுத்த திருமாவளவன் டெல்லி சென்றிருந்தார். இந்நிலையில், திருமாவளவன் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பேசியிருந்த காணொளி ஒன்று அவரது எக்ஸ் தளத்தில் பக்கத்தில் பகிரப்பட்டு இருந்தது.
அந்த காணொளியில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு. கடைசி மக்களுக்கு ஜனநாயகம். எளிய மக்களுக்கு அதிகாரம் இதையெல்லாம் சொல்கின்ற கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி'' என்று திருமாவளவன் பேசுவது போல் அமைந்திருந்தது. அந்த காணொளி சமூகவலைத்தளத்தில் வைரலானது. மேலும், திருமாவளவன் திமுகவை தாக்குவதாக நெட்டிசன்கள் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்தனர்.
இது குறித்து விளக்கம் அளித்திருந்த திருமாவளவன், "நாங்கள் தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த காலத்தில் இருந்து, நாங்கள் முன்வைத்து வரக்கூடிய கருத்துதான் அது. மூப்பனாரோடு கைகோர்த்து தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது, நாங்கள் வைத்த முழக்கம், 'கடைசி மக்களுக்கு ஜனநாயகம்.. எளிய மக்களுக்கு அதிகாரம்' என்பதுதான்.
எல்லா மேடைகளிலும் மூப்பனார் 'திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்கிற முழக்கத்தை வைக்கிறார். அவரை நான் வரவேற்று பாராட்டுகிறேன்' என்று 1999ஆம் ஆண்டிலேயே பேசியிருக்கிறார். அதை நினைவுப்படுத்தி நான் செங்கல்பட்டில் பேசினேன்.
அந்தப் பேச்சை எடுத்து என்னுடைய அட்மின் நிர்வாக குழுவில் இருப்பவர்கள் பதிவு செய்துவிட்டார்கள் என்று கருதுகிறேன். ஏன் அதை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இன்னும் நான் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை. அது இப்போது வைத்த கோரிக்கை அல்ல.. 1999ஆம் ஆண்டிலேயே அடியெடுத்து வைக்கும்போது நெய்வேலியில் சொன்னது. இது ஜனநாயக பூர்வமான முழக்கம். நான் முழுமையாக உடன்படுகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
இதனால் அந்த காணொளி திருமாவளவனின், அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டு, மீண்டும் 2வது முறையாக அதை நீக்கினார்கள். இதனால், திருமாவளவன் விளக்கத்திற்கு பிறகு காணொளி நீக்கப்பட்டதால் சர்ச்சைக்கு முடிவுகட்டப்பட்டதாக கருதப்பட்டது.
இந்நிலையில், 'ஆட்சியிலும், அதிகாரத்தில் பங்கு வேண்டும்' என்று திருமாவளவனின் சர்ச்சைக்குரிய காணொளி எக்ஸ் தளத்தில் 3ஆவது முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது அரசியல் மட்டத்தில் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது. ஆக, திருமாவளவன் ஆட்சியதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று உறுதியான கோரிக்கையோடு இருக்கிறாரா என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *