இந்திய விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வங்கதேச விமானம் யாருடையது?

top-news
FREE WEBSITE AD

இந்தியாவின் ராய்ப்பூரில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஒரு வங்கதேச விமானம் இன்னமும் அங்கேயே நின்றுகொண்டிருக்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று, டாக்காவில் இருந்து மஸ்கட் செல்லும் வழியில் 173 பயணிகளுடன் யுனைடெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவரசரமாக தரையிறக்கப்பட்டது.

அதிலிருந்து தற்போதுவரை 9 ஆண்டுகளாக அந்த விமானம் அங்கேயே நிற்கிறது. சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த விமானத்தை வங்கதேச யுனைடெட் ஏர்வேஸ் மறந்த நிலையில், இது தற்போது மிகப் பெரிய இரும்புக் கழிவாக மாறியிருக்கிறதே தவிர, வானில் பறப்பதற்கான தரத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் விமானம் குறித்து வங்கதேசத்திலிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் பதிலும் கிடைக்கப் பெறவில்லை என்று இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமில்லாமல் இந்த விமானத்தை நிறுத்திவைத்திருக்க ஒரு மணி நேரத்துக்கு ரூ.320 வாடகைக் கட்டணம். இந்த கட்டணமே இதுவரை ரூ. 4 கோடியை எட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தனியார் விமான நிறுவனத்துக்கு இந்தக் கட்டண பாக்கி நிலுவையில் இருப்பது தெரியுமா என்றுகூட தெரியவில்லை. விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, விமானப் பொறியாளர்கள் குழுவினர் வங்கதேசத்திலிருந்து வந்து தொழில்நுட்பப் பிரச்னையை சரி செய்தனர். விமானம் பறக்கத் தயாரானது. ஆனால், அதன் பிறகும் விமானத்தை டாக்காவுக்குக் கொண்டு செல்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக, எந்தத் துறையைத் தொடர்புகொள்வது என்று விமான நிலைய அதிகாரிகளுக்கும் தெரியாமல் போனது. அது மட்டுமல்ல, வெளிநாட்டு விமானம் ஒன்று, இந்தியாவில் அதிக காலம் நிறுத்தப்பட்டிருந்தால் அதற்கு எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அதனை எப்படி கையாள வேண்டும் என்றும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லை. வங்கதேச விமானம் நீண்ட நாள்களாக இங்கு நிறுத்தப்பட்டிருப்பது குறித்து விரைவில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் விமானத்தின் உரிமையாளரான யுனைடெட் ஏர்வேஸ் நிறுவனமும், தனது விமான சேவையை முற்றிலும் நிறுத்திவிட்டு, நிறுவனத்தையே மூடிவிட்டுப் போய்விட்டது. விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வங்கதேச விமானமும், யாருக்கும் இடையூறு இல்லாத இடத்துக்கு நகர்த்திவைக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *