பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் மூன்று பேர் உயிரிழப்பு- ப்லர் காயம்!

- Muthu Kumar
- 30 Jun, 2025
ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பிரதான கோயிலில் இருந்து 2.6 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயிலுக்கு ரதங்கள் இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு 9 நாட்கள் வழிபாட்டுக்குப் பிறகு ரதங்கள் மீண்டும் ஜெகநாதா் ஆலயத்துக்குத் திரும்பும்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பிரேமகாந்த மொஹந்தி (80), பசந்தி சாஹூ (36) மற்றும் பிரபாதி தாஸ் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பூரி மாவட்ட தலைமையக மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டபோது உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை 4 முதல் 5 மணிக்குள், பூரண தரிசனம் காண ஏராளமான பக்தர்கள் திரண்ட நிலையில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் மரக்கட்டைகள் ஏற்றிச் சென்ற இரண்டு லாரிகள் நெரிசலான பகுதியில் நுழைந்ததால் நிலைமை மேலும் மோசமானது.
சம்பவம் குறித்து ஒடிசா மாநில சட்டத்துறை அமைச்சர் பிருதிவிராஜ் ஹரிசந்தன் கூறுகையில், “மூன்று உயிரிழப்புகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கான முழுமையான விசாரணை நடத்தப்படும். தவறுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என உறுதி அளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *