பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டி ஏன்?

- Muthu Kumar
- 23 May, 2025
(தொகுப்பு பொன். முனியாண்டி)
இன்று மே 23ஆம் தேதி நடைபெற விருக்கும் பிகேஆர் தலைமைத்துவ மன்ற மேல்மட்டப் பதவிகளுக்கு. குறிப்பாகத் துணைத் தலைவர் பதவிக்குக் கடும் போட்டி நிலவுகிறது.அதில் முக்கியமாக நடப்புத் துணைத் தலைவரும் பொருளாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லியை எதிர்த்து பிரதமரும் கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த புதல்வி நூருல் இஸா அன்வார் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் முனைப்பு காட்டி வருகிறார்.
நூருல் இஸ்ஸா தமது அரசியல் வாழ்வில் பல போராட்டங்களை எதிர்கொண்டு கடுமையாகப் போராடி வந்துள்ளார். தமது தந்தையார் சிறையில் இருந்தபோது, கட்சிக்காகவும் தந்தையாருக்காகவும் கடுமையாகப் போராடியதோடு, ஆளும் கட்சி உறுப்பினர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் நாடாளுமன்றத்தில் ஈடு கொடுத்து வாதாடியது இன்னும் மறக்கமுடியாத சம்பவங்களாகும்.
ஆனால், தற்போது என்றுமே எண்ணிப் பார்க்க முடியாத போரை, அரசியலில் ஜாம்பவானாகக் கிளர்ந்தெழுந்துள்ள அறிவாற்றல் மிக்க அரசியல்வாதியான ரபிஸி ரம்லியை எதிர்த்துக் களத்தில் குதித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அவர் இன்னமும் தமது வெற்றியை அடையும் மார்க்கத்தைத் தேடிக் கொண்டிருப்பதாகச் செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கட்சியில் ரிபோர்மாஸி இளவரசி' என்று செல்லமாக அழைக்கப்படும் நூருல் இஸ்ஸா அன்வார் மகளிர் பகுதியின் அதிகாரத்துவ வேட்பாளர் என்று அடைமொழி வழங்கப்பட்டு அவரது போட்டிக்குக் கட்சியில் மேல்மட்ட தலைவர்களின் ஆசியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மேலும் கட்சியின் மகளிர் பிரிவு மற்றும் இளைய தலைமுறையினரின் ஆதரவையும் அவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர் நவீன பாரம்பரியத்தையும் மலாய் கலாச்சாரத்தையும் வரிந்து கொண்டிருக்கும் மலாய் பெண் என்றும் ஆராதிக்கப்படுகிறார். அடக்கமாகக் காணப்படும் நூருல், அதிக ஆடம்பரம் எதுவுமில்லாமல், மென்மையான போக்கோடு மிகவும் சாதுவான முகப் பொலிவோடும் காணப்படுகிறார். தமது தாயாரின் முகப் பொலிவோடும் தந்தையாரின் புன்னகையோடும் தென்படுவது மக்களிடையே அவருக்கு ஒரு நல்ல வரவேற்பையும் மரியாதையையும் பெற்றுத் தந்துள்ளது. நடப்புத் துணைத் தலைவரான ரபிஸி ரம்லி 47 வயதாகியிருக்கும் வேளையில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் நூருல் இஸ்ஸா 44 வயதானாலும் இன்னமும் இளமை குன்றாமல் காணப்படுகிறார்.
ரபிஸி அனுபவமிக்க முதிர்ச்சிமிக்க கட்சி
உறுப்பினர்களைக் கவர்ந்திருப்பதாகவும் அதுவும், ஆண்களின் ஆதரவை அவர் வெகுவாகப் பெற்று வருதாகவும் சொல்லப்படுகிறது. அவரின் ஆளுமைப் பண்புகள் சிறிது தடுமாற்றத்தைத் தந்தாலும், அவருக்கே எங்கள் வாக்கு என்று பலரும் கூறுகின்றனர்.பொருளாதாரத் துறை அமைச்சர் பதவியில் அவர் இன்னும் அதிகமாகச் செய்திருக்கலாம் என்று கூறுவோர் அவரின் சிந்தனை, திட்டங்களையும்
வியூகங்களையும் வகுக்கும் பாங்கு போன்றவை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கட்சியில் தந்தை மற்றும் மகளின் ஆதிக்கம் நெருடலை ஏற்படுத்துவதாக உறுப்பினர்களில் பலர் சுட்டிக் காட்டுகின்றனர். இது கட்சியில் குடும்ப சாம்ராஜ்யத்தை உருவாக்கும் என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட சிலர்,வரும் காலத்தில் கட்சி நூருல் இஸ்ஸாவின் தலைமைத்துவத்தின் கீழ் செயல்படும் என்று உறுதியாகக் கூறுகின்றனர். ரபிஸிக்கு வாக்களிக்கும் எண்ணத்தில் இருக்கும் உறுப்பினர்களில் பலர், கட்சித் தலைவரின் புதல்வியை ரபிஸி வெல்வது நிச்சயமாக முடியாத காரியம் என்றே கூறுகின்றனர்.
நூருல் இஸ்ஸாவின் பரப்புரைகள் ஒரே மாதிரியாகவும் அரைத்த மாவையே அரைக்கும் விதமாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. தமது கருத்துகளை அவர் ஆணித் தரமாகவும் மக்களைக் கவரும் வண்ணமாகவும் எடுத்துச் செல்லவில்லை என்ற கருத்தும் கூறப்படுகிறது.துணைத் தலைவர் தேர்தல் பற்றி தலைவர் ஒருவர் கூறும்போது, போட்டியானது கட்சியில் அனைவரும் யாருடனும் ஒன்றிணைந்து செயல்பட முடியும் அல்லது யாருடனும் ஒன்றிணைந்து செல்ல முடியாது என்ற இரண்டில் ஒன்றைத் தீர்மானிக்கும்படியாக இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.
கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பை ரபிஸி உணர்ந்து செயல்படவில்லை. அவர் கட்சித் தலைவருக்கு அனுசரணையாக இருந்ததில்லை. அதன் காரணமாகவே கட்சியில் மாற்றம் வேண்டுமென உறுப்பினர்கள் விரும்புகின்றனர் என கூறப்படுகிறது. கட்சியைத் தற்காத்துப் பேசுவதற்குப் பதிலாக ரபிஸி, அதனை சீண்டும் வகையில் பரப்புரைகளை நிகழ்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.ரபிஸி கட்சித் தலைவருடன் இணைந்து போக முடியாததே துணைத் தலைவர் பதவிக்கு அவரை எதிர்த்துப் போட்டி என கூறப்படுகிறது.
முதல் நிலையில் இருப்பவர் இரண்டாம் நிலையில் உள்ளவரை நம்பவில்லை எனும்போது, இரண்டாம் நிலையில் இருக்கும் நபர், தாம் முதல் நிலையில் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்' என்ற சொல்லாடல் கட்சியில் வேகமாகப் பரவி வருகிறது. பல சந்தர்ப்பங்களில் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் ரபிஸியின் சாடல்கள் மரியாதைக் குறைவாக இருந்ததாகவும் பலர் கூறுகின்றனர்.
2022இல் பண்டார் துன் ரஸாக் நாடாளுமன்றத் தொகுதியில் தமது நண்பர் ஒருவர் போட்டியிட வேண்டுமென ரபிஸி வலியுறுத்திய வேளையில், ஆனால், அத்தொகுதியின் தலைவர் அத்தொகுதியில் டத்தோஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் வேண்டுமென்ற கோரிக்கையை விடுத்ததாகச் சொல்லப்படுகிறது.ரபிஸியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர், அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து தலைவரிடமே மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாகவும் குடும்ப அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ரபிஸி குற்றம் சாட்டியதாகச் சொல்லப்படுகிறது.
கட்சித் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் இடையே பனிப்போர் மூண்டதே தற்போது ரபிஸிக்கு எதிராக நூருல் இஸ்ஸா போட்டியிட வேண்டிய நிர்பந்தம் உருவாகியிருக்கிறது.எதிர்கால சவாலுக்கு ஏற்ற வகையில் கட்சியை வலுவாகச் செயல்பட வைக்க தமக்கு நம்பகத் தன்மைமிக்க துணைத் தலைவர் ஒருவர் வேண்டுமென அன்வார் விரும்புகிறார். அவருக்கும் ரபிஸிக்கும் இடையே விரிசல் அதிகமாகி கட்சியைப் பாதிக்கும் என்பதால், எதையும் பொருட்படுத்தாமல் கட்சியைக் காப்பாற்றவே அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதில் தமது மகளையே ரபிஸிக்கு எதிராகப் போட்டியிடவும் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமக்கு இனிமேலும் கட்சியில் முக்கிய இடம் வழங்கப்படாது என்பதை ரபிஸி உணர்ந்தே பரப்புரையில் அன்வாரின் மீது கடும் தாக்குதலை தொடுத்து வருவதாகக் கட்சியில் கருத்து நிலவுகிறது.
Pertandingan sengit bagi jawatan Timbalan Pengerusi PKR antara Datuk Seri Rabisie Ramli dan Nurul Izzah Anwar, yang mendapat sokongan kuat dalam parti walaupun berlaku ketegangan dalaman dan perpecahan keluarga dalam parti tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *