இந்தியாவின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா?
- Muthu Kumar
- 15 May, 2024
இந்தியாவுக்கு நட்பு நாடாக இருக்கும் அமெரிக்கா, திடீரென இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் எனக் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இருந்த போதிலிருந்தே, இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு நன்றாகவே இருக்கிறது. இதையடுத்து அமெரிக்கா, இந்தியா இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்நிலையில் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருக்கும் அமெரிக்கா, திடீரென இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் எனக் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
எரிசக்தி வளம் மிக்க இரானின் தெற்கு கடற்கரையின் ஓமன் வளைகுடாவில் சபஹர் துறைமுகம் இருக்கிறது. கடல்வழி, தரைவழி, ரயில் வழி எனச் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கான நுழைவாயிலாக சபஹர் துறைமுகம் விளங்குகிறது.
இந்த துறைமுகத்தை 2018-ம் ஆண்டு முதல் இந்தியா குத்தகை அடிப்படையில் நிர்வகித்து வருகிறது. இந்த குத்தகை ஓராண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு கையெழுத்தாகும். இந்த நிலையில், சபஹர் துறைமுகத்தை இந்தியா தொடர்ந்து 10 ஆண்டுகள் நிர்வகிக்க ஒப்பந்தமிட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் இரானின் தெஹ்ரானில் இந்திய போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் (IPGL) – இரானின் போர்ட் & கடல்சார் அமைப்பு (PMO) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது. மேலும், இந்தியாவின் கூடுதல் நிதியுதவியுடன் துறைமுகத்தைச் சீர்படுத்துவதிலும், இயக்குவதிலும் IPGL கணிசமான முதலீட்டைச் செய்திருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், "சபஹர் துறைமுகம் தொடர்பான ஒப்பந்தத்தில் ஈரானும், இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் எங்களுக்குத் தெரியும். சபஹர் துறைமுகம் மற்றும் ஈரானுடனான இருதரப்பு உறவுகள் குறித்து இந்திய அரசு தனது சொந்த வெளியுறவுக் கொள்கை இலக்குகள் குறித்து தெரிவிக்கும்படி கேட்போம்.
ஈரான் மீதான அமெரிக்கத் தடைகள் நடைமுறையில் உள்ளன, அவற்றை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம். எந்தவொரு நிறுவனமும், ஈரானுடன் வணிக ஒப்பந்தங்களைக் கருத்தில் கொண்டால், யாராக இருந்தாலும் அமெரிக்க பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கான ஆபத்துக்கு சாத்தியம் இருப்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று மறைமுகமாக இந்தியாவை கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *