தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்களை பெருமளவில் உருவாக்க கிம் ஜோங் உன் உத்தரவு!
- Muthu Kumar
- 16 Nov, 2024
தற்கொலைத் தாக்குதலை முன்னெடுக்கும் ட்ரோன்களை பெரும் எண்ணிக்கையில் தயாரிக்க வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஒரு நாள் முன்னதாக ட்ரோன் அமைப்பின் சோதனையை அவர் உறுதி செய்த பிறகு பெரும் எண்ணிக்கையில் தயாரிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தரை மற்றும் கடல் இலக்குகளை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ட்ரோன்களின் சோதனைகளை கிம் ஜாங் உன் மேற்பார்வையிட்டுள்ளார்.
வடகொரியாவின் UATC என்ற நிறுவனமே தொடர்புடைய ட்ரோன்களை தயாரித்துள்ளது. மேலும் தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த வகை ட்ரோன்கள் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கக் கூடியவை.கடந்த ஆகஸ்டு மாதம் இந்த வகை ட்ரோன்களை வடகொரியா முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. ரஷ்யாவுடனான வடகொரியாவின் ஆழமான உறவு, தற்போது தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்கள் தயாரிக்கும் நிலைக்கு வடகொரியாவை உயர்த்தி இருக்கலாம் என்றே நிபுணர்கள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை முயற்சி முழு வெற்றியைப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு தாக்குதல் எல்லைகளுக்குள் பயன்படுத்தப்படும் தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்கள்,தரையிலும் கடலிலும் உள்ள எதிரி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் பணியைச் செய்ய வேண்டும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து ட்ரோன்கள் தொடர்பில் கிம் ஜோங் உன் தெரிவிக்கையில், இந்த வகையான ட்ரோன்கள் பயன்படுத்த எளிதாக உள்ளது என்றார்.நிபுணர்கள் சிலர் தெரிவிக்கையில், வடகொரியாவின் இந்த ட்ரோன்களின் புகைப்படங்கள் இஸ்ரேலின் HAROP தற்கொலை ட்ரோன்கள் மற்றும் ரஷ்யாவின் Lancet-3 போன்ற ட்ரோன்களின் மாதிரியை நினைவூட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக இதன் தொழில்நுட்பத்தை வடகொரியா பெற்றிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. 2022ல் வட கொரியா அனுப்பிய ட்ரோன்களை தென் கொரிய ராணுவத்தால் சுட்டு வீழ்த்த முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *