இந்துக்கள் இனி இந்த மட்டன் கடையில் தான் இறைச்சி வாங்க வேண்டும்- மகாராஷ்டிரா அறிவிப்பு!

- Muthu Kumar
- 12 Mar, 2025
மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்கள் விற்பனை செய்யும் ஹலால் ஆட்டிறைச்சியை புறக்கணித்து இந்துக்கள் விற்பனை செய்யும் மட்டனை வாங்க வசதியாக மல்ஹார் சான்று வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். இவரது அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் நிதிஷ் ரானே.
மகாராஷ்டிராவில் உள்ள கன்வாலி சட்டசபை தொகுதியில் 2014, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றவர் நிதிஷ் ரானே. இவர் 2014ல் காங்கிரஸ் சார்பில் வென்ற நிலையில் அதன்பிறகு அடுத்த 2 தேர்தல்களில் பாஜகவில் வாகை சூடினார். தற்போது அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் தான் நிதிஷ் ரானே மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு என்பது இஸ்லாமியர்களின் ஹலால் முறையில் விற்பனை செய்யப்படும் இறைச்சியை புறக்கணிக்கும் வகையில் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் நிதிஷ் ரானே, ''மகாராஷ்டிராவில் வாழும் இந்து மக்களுக்காக நாங்கள் முக்கிய நடவடிக்கையை எடுத்துளேளாம். malharcertification.com என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் மூலம் 100 சதவீதம் நாம் சரியான மட்டன் கடையை அணுக முடியும். அதோடு இறைச்சி விற்கும் நபர் இந்துவாக இருப்பார். இந்த மட்டனில் எந்த கலப்படமும் செய்ப்படாது.
இதனால் இந்துக்கள் மல்ஹார் சான்று உள்ள கடையில் மட்டன் வாங்க வேண்டும். மல்ஹார் சான்று இல்லாத கடையில் மட்டன் வாங்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். இந்து நடவடிக்கை என்பது இந்து மதத்தை சேர்ந்த இளைஞர்களின் நிதி தேவையை பூர்த்தி செய்து தன்னிறைவு அடைய வழிவகுக்கும் என்று நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
அதாவது இஸ்லாமியர்கள் ஹலால் முறையிலான உணவுகளை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் ஹலால் ஆட்டிறைச்சியை மட்டுமே இஸ்லாமியர்கள் விற்பனை செய்து வருகின்றனர். அதாவது இஸ்லாமிய சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கும் கூற்றுப்படி ஆடு பலியிடப்பட்டு இறைச்சி விற்பனை செய்யப்படும். புரியும்படி கூற வேண்டும் என்றால் ஆட்டில் இருந்து முதலில் ரத்தம் என்பது வெளியேற்றப்படும்.
இந்த ஹலால் ஆட்டிறைச்சியை இந்துக்களும் வாங்கி சமைத்து சாப்பிடுகின்றனர். பாஜக மற்றும் இந்து அமைப்பினர் ஹலால் முறையிலான ஆட்டிறைச்சியை இந்துக்களுக்கு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வடமாநிலங்களில் பல இடங்களில் இந்த விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் மகாராஷ்டிராவில் மல்ஹார் சான்று வழங்கப்பட உள்ளது.
இந்த சான்று என்பது இந்துக்களின் ஆட்டிறைச்சி கடைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதோடு இந்த சான்று இருக்கும் கடையில் ஹாலால் ஆட்டிறைச்சி என்பது இருக்காது. இந்த கடைகளில் 'ஜக்தா' (jhatka) முறையில் பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சி மட்டுமே விற்பனை செய்யப்படும். ஜக்தா முறை என்பது ஆடு துன்புறுத்தப்படாமல் ஒரே அடியில் கொல்லும் முறையாகும். இது ஹாலால் முறைக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கும்.
இந்திய நாட்டில் இருந்து இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளுக்கு ஹலால் சான்றுடன் ஆட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஏற்றுமதியின்போது ஹலால் சான்று எப்படி வழங்கப்படுகிறதோ? அதேபோல் மகாராஷ்டிராவில் இந்துக்கள் ஜக்தா முறையில் பலியிடப்படும் ஆட்சிறைச்சி கடைகளை அடையாளம் காண மல்ஹார் சான்று என்பது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *