பிட்காயின் திருடி ஒரே மாதத்தில் 30 சொகுசு கார்கள் வாங்கிய சிங்கப்பூர் இளைஞர்!

- Muthu Kumar
- 14 Mar, 2025
அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் பிட்காயின்களை திருடி இளைஞர் ஒருவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு திருடப்பட்ட பிட்காயின்களை கொண்டு 30 ஆடம்பர கார்களை வாங்கி இருக்கிறார்.சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர் தான் மலோன் லாம். 20 வயதான இவர் மிகப்பெரிய அளவில் கிரிப்டோ கரன்சிகளை கொள்ளையடித்திருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் அவருக்கு எதிரான வழக்கு விசாரணை அமெரிக்காவில் தொடங்க இருக்கிறது. 450 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை திருடி இருப்பதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என சொல்லப்படுகிறது.அமெரிக்க காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில் லாம் மற்றும் அவருடைய நண்பர் செரோனாவும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அமெரிக்காவை சேர்ந்த ஒரு பிட்காயின் முதலீட்டாளரை ஏமாற்றி அவருடைய கணக்கிலிருந்து 4,100 பிட்காயின்களை தங்களுடைய கணக்குக்கு மாற்றம் செய்துள்ளனர்.
அந்த முதலீட்டாளரிடம் பழகி அவருடைய வங்கி கணக்கு, டிரேடிங் கணக்கு உள்ளிட்டவற்றின் தகவல்களை திருடியுள்ளனர். இதனை அடுத்து 4100 பிட்காயின்களை அவரது வாலெட்டில் இருந்து திருடி பல்வேறு கணக்குகளுக்கு அதை மாற்றி யாரிடமும் சிக்காமல் தப்பித்துள்ளனர். இவ்வாறு தங்கள் வசம் வந்த 4100 பிட்காயின்களையும் கொண்டு இருவரும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் பிட்காயின்களை தங்கள் கணக்கிற்கு திருட்டுத்தனமாக மாற்றிய இவர்கள் செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஒரு மாத காலத்திற்குள்ளேயே இவர்கள் 30 ஆடம்பர கார்களை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல நகைகள், டிசைனர் ஹேண்ட் பேக்குகள் மற்றும் தினமும் பப்புக்கு செல்வது என செலவு செய்துள்ளனர்.அமெரிக்கா காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி பார்க்கும்போது லாம் தினந்தோறும் 4 லட்சம் அமெரிக்க டாலர்களை நைட் கிளப்புகளில் மட்டுமே செலவிடுவாரம்.
ஒரு நாள் அவர் சுமார் 5 .69 லட்சம் அமெரிக்க டாலர்களை செலவு செய்திருக்கிறார். மேலும் பல்வேறு உயர் ரக கை கடிகாரங்கள், லம்போர்கினி ஃபெராரி உள்ளிட்ட ஆடம்பர கார்கள் உள்ளிட்டவற்றை வாங்கி குவித்துள்ளனர்.இவர்கள் திடீரென மிக ஆடம்பரமாக செலவு செய்து காவல்துறையின் சந்தேக வளையத்தில் சிக்கியுள்ளனர்.
பின்னர் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் இருவரும் பிட்காயின்களை திருடி இப்படி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்படும்போது லாம் மற்றும் அவரது நண்பர் 5 லட்சம் டாலர்கள் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை கட்டியிருந்ததாக சொல்லப்படுகிறது.தற்போதைக்கு இவர்களிடமிருந்து 70 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள பிட்காயின்கள் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒரு திருட்டு சம்பவமாக இது மாறி இருக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *