இம்ரான் கான் அழைப்பு போராட்டத்தால் பாகிஸ்தானில் கலவரம்-5 பேர் பலி!

- Muthu Kumar
- 27 Nov, 2024
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிக்கக்கோரி இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக செல்கிறார்கள்.இந்த பேரணியில் திடீரென நேற்று வன்முறை வெடித்த நிலையில், இதில் ஐந்து பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். மேலும், போலீசார் போராட்டக்காரர்கள் உட்படப் பல நூறு பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018 - 2022 வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான்.. தோஷகானா வழக்கு, சைபர் வழக்கு என 71 வயதான இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இடையில் கடந்த பிப். மாதம் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடந்த நிலையில், அதில் இம்ரான் கான் கட்சியினர் போட்டியிட்டனர். இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்பட்ட நிலையில், சுயேச்சைகளாக அவரது கட்சியினர் களமிறங்கினர். அப்படியிருந்தாலும் சுமார் 90 இடங்களில் வென்றனர்.
இருப்பினும், இம்ரான் கான் தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே இம்ரான் கானை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்தி வருகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த பேரணிக்கு இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி தலைமையேற்றுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடந்த பேரணியில் அங்கு குவிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. செவ்வாய்க்கிழமை போராட்டக்காரர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள டி-சௌக் என்ற பகுதியை நோக்கி தங்கள் பேரணியை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
செவ்வாய் கிழமை ஏற்பட்ட வன்முறையில், ஒரு போலீஸ் அதிகாரி பரிதாபமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் நான்கு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.. இம்ரான் கான் ஆதரவாளர்களால் அங்குப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், போலீஸ் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளது. பல இடங்களில் போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டதால் பல நூறு பேர் காயமடைந்தனர்.
இம்ரான் கான்: முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பிடிஐ தலைவர் இம்ரான் கான் நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். தனக்கு எதிராகச் சதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த சதியை முறியடிக்க மக்கள் நாடு முழுக்க போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். அதை தொடர்ந்தே அவரது மனைவி புஷ்ரா பீபி மற்றும் கைபர்-பக்துன்க்வா மாகாண முதல்வர் அலி அமின் கந்தாபூர் இணைந்து இந்த அணிவகுப்பைத் தொடர்ந்தனர்.
இந்த போராட்டத்தைத் தடுக்க பாக். அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்கள் வரும் வழியில் கப்பல் கன்டெய்னர்கள், கான்கிரீட் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம் இதை எல்லாம் எதிர்பார்த்தே வந்த போராட்டக்காரர்கள் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி அந்த தடைகளை அகற்றிவிட்டுத் தொடர்ந்து இஸ்லாமாபாத் நோக்கி முன்னேறினர். இதன் காரணமாகவே வன்முறை அங்கு வெடித்தது.
இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாப் மாகாணம் முழுவதும் நடந்த மோதல்களில் ஒரு போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.. குறைந்தது 119 பேர் காயமடைந்துள்ளனர்.. அதில் இருவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. மேலும் 22 போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *