கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் முதன்முறையாக அமெரிக்க துணை தூதரகம்!

- Muthu Kumar
- 19 Jan, 2025
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் முதன்முறையாக அமெரிக்க துணை தூதரகம்.பெங்களூரில் திறக்கப்பட்டுள்ள இந்த அமெரிக்க துணை தூதரகத்தின் மூலம் பெங்களூர் வாசிகள் இனி விசா விண்ணப்பங்களுக்காக சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது.பெங்களூரில் அமெரிக்க துணை தூதரகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கர்செட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்போதைக்கு விட்டல் மல்லையா சாலையில் இருக்கக்கூடிய ஜெ.டபிள்யு .ஹோட்டலில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டு இருக்கிறது. இது தற்காலிகமான இடம் தான் என்றும் விரைவில் நிரந்தரமாக அமெரிக்க துணை தூதரகத்திற்கான கட்டிடம் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கே குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்டு தற்போதைக்கு பணிகள் நடைபெறும் என தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர். கர்நாடக மாநில மக்கள் அமெரிக்க விசா பெறுவதற்கு சென்னை அல்லது ஹைதராபாத்திற்கு தான் பயணம் செய்து வருகின்றனர்.குறிப்பாக மாணவர்கள், ஐடி துறைகளில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவிற்கு செல்ல விரும்பும்போது விசா விண்ணப்பங்களுக்காகவே பலமுறை சென்னை மற்றும் ஹைதராபாத் இடையே அலைய வேண்டியிருந்தது.
இந்த நிலையில் தான் தற்போது பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் தொடங்கப்பட்டு இருக்கிறது.கடந்த 2006ம் ஆண்டு முன்னாள் கர்நாடக மாநில முதலமைச்சர் ஹெச் டி குமாரசாமி பெங்களூருவில் அமெரிக்காவின் துணை தூதரகம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது இருந்தே பல்வேறு தலைவர்களும் மத்திய அரசிடமும் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடமும் இது தொடர்பாக தொடர்ந்து தங்களுடைய விண்ணப்பங்களை முன்வைத்து வந்தனர்.
2018 ஆம் ஆண்டு கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த குமாரசுவாமி அப்போதைய இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம் பெங்களூருவில் அமெரிக்க தூதரக அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் தான் தற்போது இந்த தூதரகமானது தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கர்செட்டி இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு நாள்தோறும் வலுவடைந்து வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று கூறினார்.இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு வலுவாக இருப்பதற்கு பெங்களூரு நகரம் ஒரு காரணம் எனக் கூறிய பெங்களூருவை சேர்ந்த பெரும்பாலான ஐடி நிபுணர்கள் அமெரிக்காவிற்கு ஆன்சைட் வேலைக்காக செல்கின்றனர் என்பதை குறிப்பிட்டார்.
வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்தியாவின் துணை தூதரகம் புதிதாக அமைக்கப்பட இருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார். கூடிய விரைவில் பெங்களூருவில் மற்ற நாடுகளின் துணைதூதரங்களும் திறக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *