நிலவில் பெரிய அளவிலான குகை - இத்தாலி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
- Muthu Kumar
- 17 Jul, 2024
நிலவில் பெரிய அளவிலான குகைகளை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் 50 ஆண்டுகளுக்கு பின் மர்மம் விலகியதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் தரையிறங்கிய இடத்திலிருந்து சற்று தொலைவில் பிரமாண்டமான குகை இருப்பதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். எதிர்காலத்தில் நிலவை ஆய்வு செய்யதற்கும், விண்வெளி வீரர்கள் அங்கு சென்று தங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பூமியுடன் ஒப்பிடுகையில் நிலவில் பகலும், இரவும் 14 நாட்கள் மாறி மாறி வரும். பகலில் வெயிலின் அளவு 106 டிகிரி வரை காணப்படும். இரவு நேரத்தில் குளிரானது மைனஸ் 100 டிகிரிக்கும் குறைவாக இருக்கும். இதனால் மனிதர்கள் அங்கு தங்கி ஆய்வு செய்வது இயலாத காரியம். அதிகபட்சமாக கடந்த 1972ல் நாசாவின் "அப்பல்லோ 17" விண்கலத்தில் சென்ற வீரர்கள் அதிகபட்சமாக 75 நிமிடங்கள் நிலவில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், நிலவில் தற்போது பெரிய அளவிலான குகை இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை இத்தாலி தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. இந்த குகை "அப்பல்லோ 11" தரையிறங்கிய இடத்தில் இருந்து வெறும் 250 மைல்கள் அதாவது 400 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இந்த குகை மிக ஆழமானது. ரேடார் தரவுகள் குகையின் ஆரம்ப பகுதியை மட்டுமே உறுதிபடுத்தி உள்ளன. இது குறைந்தபட்சம் 130 அடி அதாவது 40 மீட்டர் அகலமும், பல்லாயிரக்கணக்கான மீட்டர் நீளமும் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெரிய குகையில் ஆய்வாளர்களுக்கான நிரந்தர ஆய்விடம் அமைக்க முடியும். மேலும், நிலவில் தாங்க முடியாத வெப்பநிலையிலிருந்தும், கதிர்வீச்சிலிருந்தும் ஆராய்ச்சியாளர்களை பாதுகாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற 200க்கும் மேற்பட்ட குகைகள் நிலவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவில் குகை இருப்பது தொடர்பான ஆய்வுகள் கடந்த 50 ஆண்டாக மர்மமாக இருந்து வந்த நிலையில் இந்த தகவல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *