மருந்து விலைப் பட்டியலை காட்சிக்கு வைக்க கிளினிக்குகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை!

- Muthu Kumar
- 19 Apr, 2025
கோலாலம்பூர், ஏப். 19 -
பொது கிளினிக்குகளில் மருந்துகளின் விலைகள் கட்டாயமாக காட்சிக்கு வைக்கப்பட வேண்டும் என்ற தமது அமைச்சின் நடவடிக்கைக்குப் பின்னால் இருக்கும் நியாயம் குறித்து கேள்வி எழுப்பி இருக்கும் தனியார் மருத்துவர்களை, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் அர்மிசான் முகமது அலி சாடினார்.
மருந்துப் பொருட்களுக்கான விலைப்பட்டியலுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டியதை நியாயப்படுத்தக் கூடிய வலுவான காரணங்களை தெரிவிக்குமாறு, மலேசிய தனியார் மருத்துவர்கள் சங்கங்களின் சம்மேளனத்தை அவர் வலியுறுத்தினார்.
"ஏன் விலக்கு அளிக்க வேண்டும்? தங்கம் உட்பட இதர பொருள்களுக்கான விலைகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றனவே. ஆதலால், மருந்துகள் மட்டும் ஏன் மாறுபட்ட கோணத்தில் கவனிக்கப்பட வேண்டும் என்று அர்மிசான் கேள்வி எழுப்பியதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொருள்கள் மற்றும் சேவைக்கான கட்டணங்களை காட்சிக்கு வைக்கக் கோரும் அதிகாரத்தை, 2011ஆம் ஆண்டு விலைக் கட்டுப்பாடு மற்றும் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு எதிரான சட்டத்தின் செக்ஷன் 10, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சுக்கு வழங்குவதை அவர் சுட்டிக் காட்டினார்.
மருந்துகளின் விலைகளை காட்சிக்கு வைப்பதனால், அவற்றின் விலையை சரிசெய்வதில் தனியார் கிளினிக்குகளும் மருந்தகங்களும் தடுக்கப்படும் என்று அர்த்தமாகாது என்றும் அர்மிசான் தெரிவித்தார்.மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்தும் எண்ணத்தை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சு கொண்டிருக்கவில்லை. மருந்துகளின் விலைகள் காட்சிக்கு வைக்கப்படுவதை உறுதிப்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.
தனியார் சுகாதார மையங்கள், வரும் மே ஒன்றாம் தேதி முதல் மருந்துகளின் விலைகளை கட்டாயம் காட்சிக்கு வைக்க வேண்டும் என்ற வரைவுச் சட்டம் இன்னமும் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில்தான் இருப்பதாகவும் அவர் கூறினார்.
Menteri Arminsan tegur doktor swasta persoal arahan paparkan harga ubat di klinik. Beliau minta alasan kukuh bagi pengecualian. Paparan harga bukan untuk kawal harga, tapi tingkat ketelusan. Peraturan dijangka berkuatkuasa 1 Mei ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *