அதிசய வானம்! ஜூன் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நேர்கோட்டில் தெரியப் போகும் 6 கோள்கள்!

top-news
FREE WEBSITE AD

பூமியில் இருந்து பார்க்கும்போது 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தெரியும் அதிசய நிகழ்வு, வரும் ஜூன் 3 ஆம் தேதி நிகழ்கிறது.அன்று அதிகாலையில், 6 கோள்களை வரிசையாக பார்க்க முடியும்.

வரும் ஜூன் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் வானில் ஒரு அதிசயமான நிகழ்வைக் காணப் போகிறோம். கோள்களின் தொடர் அணிவகுப்பு (Parade of Planets) பற்றி எழுத்தாளர் பா.ஸ்ரீகுமார் குறிப்பிடுகையில், ஒரு கோளுக்கு அடுத்து இன்னொரு கோள் என்று வரிசையாக அடுக்கி வைத்தது போல நம் கண்களுக்கு தெரியும் நிகழ்வு கோள்களின் தொடர்வரிசை நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் வரும் ஜூன் 3, 4 ஆம் தேதிகளில் கோள்களின் தொடர்வரிசை நிகழ்வு நடைபெற உள்ளது.

வியாழன், புதன், செவ்வாய், யுரேனஸ், சனி மற்றும் நெப்டியூன் ஆகிய 6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல நம் கண்களுக்கு தெரிய இருக்கின்றன. இந்த 6 கோள்களையும் வரும் ஜூன் 3, 4 ஆம் தேதிகளில் கிழக்கு திசையில் சூரியன் உதிப்பதற்கு முன்னர் அதிகாலையில் அடிவானில் ஒரே வரிசையில் பார்க்க முடியும்.

இந்த 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் காணப்படவில்லை. வெவ்வேறு வட்டப்பாதைகளில் வெவ்வேறு இடங்களில் தான் சுற்றி வருகின்றன. எனினும், பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோல ஒரு தோற்றம் ஏற்படுகிறது.

சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இதில் பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர 365 நாட்கள் ஆகின்றன. இதேபோல, ஒவ்வொரு கோள்களுக்கும் குறிப்பிட்ட நாட்கள் ஆகின்றன. கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூா்வ நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படுவது உண்டு.

அந்த வகையில், வரும் ஜூன் 3 ஆம் தேதி அதிகாலையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக 6 கோள்களையும் வரிசையாகப் பார்க்கலாம். காற்று மாசு, ஒளி மாசு இல்லாத, அடிவானம் மறைக்காத சற்று உயரமான இடத்தில் அமர்ந்துகொண்டு இதனை வெறும் கண்களால் நன்றாகப் பார்க்க முடியும்.

புதன், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 4 கோள்களை மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடியும். செவ்வாய், சனி கோள்கள் வெறும் கண்களால் பார்த்தால் மங்கலாகத் தெரியும். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்கள் தொலைவில் இருப்பதால் அவற்றை தொலைநோக்கி உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும்.

அதேசமயம், புதன், வியாழன் மற்றும் யுரேனஸ் ஆகிய 3 கோள்களும் தொடுவானத்தை ஒட்டி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் இவற்றைப் பார்க்க பைனாகுலர் அல்லது தொலைநோக்கியை பயன்படுத்தக் கூடாது.

ஏனெனில், இந்தக் கோள்கள் கண்ணுக்குப் புலப்படுத்தத் தொடங்கிய சிறிது நேரத்தில் சூரியன் உதித்துவிடும். மெய்மறந்து நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சூரியன் உதித்து விடும் என்பதால், அதில் இருந்து வரும் சூரிய ஒளி பைனாகுலர் அல்லது தொலைநோக்கியால் குவிக்கப்பட்டு, நமது விழித்திரையை பாதிக்கும். கடுமையான தாக்கம் ஏற்பட்டால் விழித்திரை எரிந்துவிடும் அபாயம் உள்ளதாக வானியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஜூன் 3 மட்டுமல்லாது அடுத்த நாள் ஜூன் 4ஆம் தேதியும் அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு சற்று நேரம் முன்பாக இதே கோள்களை சிறிது மாறுபாட்டுடன் நேர்கோட்டில் காண முடியும். ஜூன் 3 ஆம் தேதி சனிக்கோளுக்கு கீழேயும், 4 ஆம் தேதி செவ்வாய் கோளுக்கு கீழேயும் பிறைச் சந்திரனையும் காணலாம். இது பார்ப்பதற்கு இன்னும் அழகாகத் தெரியும்.

இதுபோன்ற 5 அல்லது 6 கோள்களின் தொடர் அணிவகுப்பு மீண்டும் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 18, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 28, 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆகிய நாட்களிலும் நம் கண்களுக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *