வெள்ளத்தின் போது சேதம்,உயிர்ப்பலியை தடுக்க அபாய எச்சரிக்கை ஒலி முறை!
- Muthu Kumar
- 05 Oct, 2024
புத்ராஜெயா, அக். 5-
வெள்ளத்தின் போது சொத்துகளுக்கு அதிக சேதமும் உயிர்ப்பலியும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வெள்ள அபாய எச்சரிக்கை ஒலி முறையை இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சு மேம்படுத்தவுள்ளது. வடகிழக்கு பருவமழை 2024/2025 இவ்வாண்டு நவம்பர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த முன்னெச்சரிக்கை சமிக்ஞை முறையை தரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் சிங் து கிம் கூறினார்.
கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தின் மூலம் கிடைத்த அனுபவம் எச்சரிக்கை ஒலி முறையை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார். அச்சமயம் ஷா ஆலம், தாமான் ஸ்ரீ மூடாவில் நிகழ்ந்ததை உதாரணம் கூறலாம். அப்போது எழுப்பப்பட்ட ஒலி போதிய சத்தமின்றி இருந்தால் அதனை பொதுமக்களால் கேட்க இயலவில்லை.
மேலும், போலீஸ் அல்லது தீயணைப்புத்
துறையின் எச்சரிகை ஒலி என அதனை பலர் நினைத்த காரணத்தால் உடனடி நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். இதனைக் கருத்தில் கொண்டு வடிகால், நீர் பாசனத் துறை சைரன் ஒலி முறையை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த புதிய முறையின் கீழ் எழுப்பப்படும் ஒலி போலீஸ், தீயணைப்பு துறையின் ஒலியை விட மாறுப்பட்டதாக இருக்கும் என்பதோடு குரல் வழி எச்சரிக்கையும் விடுக்கப்படும் என்றார் அவர்.
நேற்று இங்கு “வடகிழக்கு பருவமழை - முன்களப் பணியாளர்களின் நடவடிக்கைகளும் சவால்களும்“ எனும் தலைப்பிலான தேசிய வடகிழக்கு பருவமழை ஆய்வரங்கைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக இந்நிகழ்வில் உரையாற்றிய டத்தோ சிங் கடந்த 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 400,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாகக் கூறினார். அதோடு மட்டுமின்றி 130 கோடி வெள்ளி இழப்பும் ஏற்பட்டது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 விழுக்காடாகும் என்றார் அவர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *