இன்னும் 10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவார்''- ஸ்டாலின் போடும் கணக்கு!

top-news
FREE WEBSITE AD

தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முதல் திமுகவின் தொண்டர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணியில் தான் துணை முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்றால் சில முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாகவும், அதனை முதல்வர் ஸ்டாலின் பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார். கட்சியை பொருத்தமட்டில் முதல்வர் ஸ்டாலின் வகித்து வந்த திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

தற்போது தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இதனால் இன்னும் சில நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு எப்பொழுது வேண்டுமானாலும் வெளிவரலாம். இதுதொடர்பாக அமைச்சர் தாமோ அன்பரசன், ''இன்னும் 10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவார்'' என்று கூறியுள்ளார். இதனால் திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஆவதை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதன் பின்னணியில் அவர் வைத்த 2 முக்கிய கோரிக்கைகள் தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அமைச்சரவை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் கொண்டு வர உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது தமிழகத்தை பொறுத்தவரை அமைச்சரவையில் முதல்வரை சேர்த்து மொத்தம் அதிகபட்சமாக 35 பேர் இடம்பெற முடியும். தற்போது அனைத்து இடங்களும் நிரம்பி உள்ளன. அமைச்சரவையில் காலியிடம் எதுவும் இல்லை.

இத்தகைய சூழலில் தான் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். குறைந்தபட்சம் 2 அல்லது 3 இளம் எம்எல்ஏக்களை அமைச்சர்களை புதிதாக அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இளம் எம்எல்ஏக்களை அமைச்சராக்கும்போது அவர்கள் தொய்வின்றி சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள். இது அரசுக்கு நல்ல பெயரை பெற்று கொடுக்கும். அதேபோல் அவர்கள் தாங்கள் சார்ந்த மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் சுறுசுறுப்பான அரசியலில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் கட்சியும் நன்கு வளரும்.

தற்போது தமிழகத்தை பொருத்தவரை சீமானின் நாம் தமிழர் கட்சியில் அதிகமான இளைஞர்கள் சேர்ந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேபோல் வரும் 2026 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் இறங்குகிறது. விஜய் ஆக்டிவ் அரசியலுக்கு என்ட்ரி கொடுக்கிறார். இதனால் இளைஞர்கள் மட்டுமின்றி இளம்பெண்களும் விஜய்க்கு ஓட்டளிக்க வாய்ப்புள்ளது. இதனை ஈடுசெய்ய திமுகவிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் திமுகவிலும் இளைஞர்கள் அதிகமாக சேர்வதோடு, கட்சியும் அனைத்து மாவட்டங்களிலும் பலமாக இருக்கும் என்பது உதயநிதி ஸ்டாலினின் கணக்காக இருக்கிறது.

அதேபோல் இளம் ஐஏஎஸ் அதிகாரிகளை நிர்வாக துறையில் பணியில் அமர்த்த வேண்டும் என்பது உதயநிதி ஸ்டாலினின் 2வது கோரிக்கையாக உள்ளது. இதன்மூலம் அரசு நிர்வாகம் இன்னும் வேகமாக செயல்படும். அரசு சார்ந்த திட்டங்கள், ஆய்வு பணிகள் தொய்வின்றி நடக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் நினைக்கிறார். இந்த 2 கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றும் பட்சத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் தொடர்பான அறிவிப்பு என்பது வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் உதயநிதி ஸ்டாலினின் இந்த 2 கோரிக்கை பற்றி முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறாம். இதில் ஐஏஎஸ் விவகாரத்தில் பிரச்சனை இல்லாத நிலையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான விவகாரம் தான் சிக்கலாக உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் புதிதாக இளம் அமைச்சர்களை சேர்க்கும்போது தற்போது அமைச்சர்களாக உள்ளவர்களை நீக்க வேண்டும். இதனால் இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுமையாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் கூட உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றி அவர் துணை முதல்வர் ஆக்கப்படுவார் என திமுகவின் உடன்பிறப்புகள் உறுதியாக கூறுகின்றனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *