தமிழகத்தில் பாஜக இனி மற்ற கட்சிகளின் தயவில் இருக்க வேண்டிய அவசியமில்லை - அண்ணாமலை.

top-news
FREE WEBSITE AD

தமிழக பாஜக தலைவரின் அரசியல் வேகம், அனைத்து கட்சியினரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

லோக் சபா தேர்தல் முடிவுகள் இன்னும் வரவில்லை.. ஆனால், அதற்குள் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய மொத்த கவனத்தையும் அண்ணாமலை குவித்து வருகிறார்.

களப்பணிகள்: இப்படித்தான், இந்த லோக்சபா தேர்தலுக்காக, தமிழக அரசியல் கட்சிகள் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு களப்பணியில் இறங்கிய நிலையில், தமிழக பாஜக மட்டும் 2 வருடங்களுக்கு முன்பேயே, இதற்கான ஆயத்த பணியில் இறங்கியது. அதுபோலவே, சட்டசபை தேர்தலிலும் கவனத்தை செலுத்தியிருக்கிறது.

இதற்காகவே, சில நாட்களுக்கு முன்பு, கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக்கூட்டத்தை நடத்திய அண்ணாமலை, சில முக்கிய அறிவுரைகளையும் அவர்களுக்கு வழங்கியிருந்தாராம்.

சட்டமன்ற தேர்தல்: குறிப்பாக, "சட்டமன்ற தேர்தலுக்கு 500 நாட்களே உள்ளதால், அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். வட மாநிலங்களில் தேர்தல் பணிகள், வெற்றிக்கான வியூகம், களத்தில் பணியாற்றுவது உள்ளிட்டவைகளை அங்குள்ள பாஜகவினர் எப்படி கையாள்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டால் உங்களுக்கு பலனளிக்கும். நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு கிடைத்த தகவல்களின்படி பூத் கமிட்டி நம்மிடம் பலவீனமாக இருப்பதால், அதனை வலிமைப்படுத்துங்கள்" என்றாராம் அண்ணாமலை.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.. இந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் ஓட்டு சதவீதம், இரட்டை இலக்கமாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக இனி மற்ற கட்சிகளின் தயவில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

 தமிழக சட்டசபைக்கு, 2026ல் நடக்க உள்ள தேர்தலுக்கு, 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை இப்போதே அறிவிக்க கட்சித் தலைமையை வலியுறுத்த போகிறேன்.. மக்கள் ஆதரவை திரட்ட மற்றொரு பாதயாத்திரையும் மேற்கொள்ள உள்ளேன்.

 வரும் ஆண்டில் 75 வயதாவதால், பிரதமர் மோடி ஓய்வு பெற்று விடுவார் என்கிறார்கள். ஆனால், இது தேவையில்லாதது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது உடல் தகுதி, கடின உழைப்பு, மக்களிடையே செல்வாக்கு என்றெல்லாம் எதை எடுத்துக் கொண்டாலும், தன்னை விட வயதில் இளையவர்களான காங்கிரசின் ராகுல், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் போன்றோரை விட, 3 மடங்கு அதிக திறன்களை பிரதமர் கொண்டுள்ளார். உடல் திறன், மன திடம் என அனைத்திலும் வலுவானவராக உள்ளார்.

அதனால், அவர் நீண்ட காலத்துக்கு தொடர்வார். 75 வயதில் ஓய்வு என்று பாஜகவின் சட்டங்களில் இல்லை... பிரதமரின் வயது மற்றும் பணிகளோடு ஒப்பிட்டால், ராகுல் வெகு தொலைவில் உள்ளார். மோடிக்கு பிறகு யார் என்பது பற்றி பேச வேண்டுமானால், 2029க்குப் பிறகு பார்ப்போம். அதுவரை இது குறித்து பேச வேண்டிய அவசியமில்லை.

ந்த விஷயத்தில், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி எனக்கு நினைவுக்கு வருகிறார்.. அடுத்த வருடம் தோனிக்கு 43 வயதாகும். ஆனாலும், அவர் தொடர்ந்து விளையாடுவார். மைதானத்தில் அவருக்கு இணையாக வேகமாக ஓடக்கூடியவர்கள் யாரும் இல்லை. அப்படி யாராவது தன்னை முந்திவிட்டால் ஓய்வு பெறுவதாக தோனி சொல்லியிருக்கிறார்.. அதுமாதிரிதான் பிரதமர் மோடியும்" என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் அண்ணாமலை.

ஏற்கனவே, ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது, "பாஜக கட்சி விதிப்படி 75 வயதைப் பூர்த்தி செய்த ஒருவர், அக்கட்சியிலிருந்து ஓய்வு பெற வேண்டும். ஆனால், அப்படி எந்த விதிமுறையும் பாஜகவில் இல்லை என்றும் பாஜக வென்றால் மோடியே 5 ஆண்டுகள் பிரதமர் பதவியில் நீடிப்பார்" என்றும் அமித்ஷா சொல்கிறார். அப்படியானால், அத்வானிக்காக தான் இந்த விதி உருவாக்கப்பட்டதா?" என்று கேள்வி எழுப்பிவருகிறார்.

இதில் ஹைலைட் என்னவென்றால், "75 வயது நிறைந்தவர்களுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படாது" என 5 வருடங்களுக்கு முன்பு அமித் ஷா பேசிய வீடியோவையும் ஆம் ஆத்மி கட்சி, சோஷியல் மீடியாவில் வைரலாக்கி கொண்டிருக்கிறது. இப்படியிருக்கும்போது, 75 வயதானவர்கள் பாஜகவிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை என்று அண்ணாமலையும் தற்போது கூறியிருப்பது பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பாஜக இனி மற்ற கட்சிகளின் தயவில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அறிவித்துள்ளது அதற்குமேல் எதிர்பார்ப்பை கிளறி விட்டுள்ளது. இதற்கெல்லாம் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எந்தமாதிரி ரியாக்ட் செய்ய போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *