9 மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ராமதாஸ் திடீர் ஆலோசனை!

- Muthu Kumar
- 02 Jan, 2025
தனது தந்தையுடன் ஏற்பட்ட மோதல் நீடித்து வரும் நிலையில் 9 மாவட்டச் செயலாளர்களுடன் அன்புமணி திடீர் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமகவில் கடந்த சில ஆண்டுகளாகவே நிறுவனர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கட்சியின் தலைவராக தலித் சமூதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பதாக ஏற்கனவே ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி கட்சியின் தலைவராக தலித் எழில்மலை, பொன்னுச்சாமி, வடிவேல் ராவணன் ஆகியோர் இருந்து வந்தனர். பின்னர் திடீரென்று ஜி.கே.மணி நியமிக்கப்பட்டார்.
தற்போது அவரையும் மாற்றிவிட்டு கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். ராமதாசின் எதிர்ப்பையும் மீறி அவர் நியமிக்கப்பட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்தநிலையில் கட்சியின் இளைஞர் அணியின் தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் நியமிக்கப்பட்டார். அப்போது அந்த நியமனத்துக்கும் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழ்குமரனால் கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவியில் நீடிக்க முடியவில்லை. இதனால் புதிய தலைவர் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் ராமதாசின் மகள் வழி பேரன் முகுந்தன், கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்படுவதாக கடந்த வாரம் நடந்த பொதுக்குழுவில் ராமதாஸ் அறிவித்தார். அப்போது மேடையில் இருந்த அன்புமணி, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு பதவி வழங்குவீர்கள். கட்சியில் சேர்ந்தவுடன் பதவி வழங்குவீர்களா என்றெல்லாம் கேள்வி கேட்டவர், திடீரென மைக்கை மேஜை மீது போட்டார்.
அப்போது ராமதாசும், இது என்னுடைய கட்சி. நான் தொடங்கி, வளர்த்த கட்சி. விருப்பம் இருந்தால் கட்சியில் இருங்கள். இல்லாவிட்டால் போகலாம் என்றெல்லாம் தெரிவித்தார். இதனால் கட்சிக்குள் கடும் புகைச்சல் எழுந்தது. இந்தநிலையில் கட்சியில் தனக்கு பொறுப்பு வேண்டாம் என்று இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அவரும் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த மோதலுக்கிடையே கட்சியின் தலைவரான அன்புமணி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரைச் சேர்ந்த 9 மாவட்டச் செயலாளர்களுடன், பனையூரில் உள்ள தனது புதிய அலுவலகத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை புதிய பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் முகுந்தனும் தனக்கு பதவி வேண்டாம் என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம், அவருக்கு வருகிற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அன்புமணி தரப்பில் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *