இந்தியா-சீனா உறவுகள் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு முக்கியம்-பிரிக்ஸ் மாநாடு!
- Muthu Kumar
- 24 Oct, 2024
ரஷ்யாவின் கசான் நகரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.2020ல் கால்வான் மோதலுக்குப் பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த முதல் இருதரப்பு சந்திப்பு இதுவாகும்.
கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடிக்கும்,சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையே எப்போதும் பாலம் போல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தோன்றினார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றத்தின் உச்சம் ஓரளவு குறைந்துள்ளது. பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேருக்கு நேர் அமர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் அவர்களே, கசானில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 5 ஆண்டுகளில் நேருக்கு நேர் அமர்ந்து பேசுவது இதுவே முதல் முறை என தெரிவித்தார்.
மேலும் இந்த சந்திப்புக்காக இரு நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவரும் காத்துக்கொண்டிருப்பதாக அவர் கூறினார். சீனாவும் இந்தியாவும் பண்டைய கலாச்சாரங்கள் கொண்ட முக்கியமான வளரும் நாடுகளாகும். இரு தரப்பினரும் அதிக உரையாடல் மற்றும் ஒத்துழைப்பைக் கொண்டிருப்பது, நமது வேறுபாடுகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை சரியாக நிர்வகிப்பது மற்றும் ஒருவருக்கொருவர் வளர்ச்சிகளைப் பூர்த்தி செய்வது முக்கியம்.
5 ஆண்டுகளாக உறைந்திருந்த உறவுஇந்தியா-சீனா இடையேயான எல்லை ரோந்து ஒப்பந்தம் மூலம் சற்று முன்னேற்றம் கண்டது. இதனை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன், பிரதமர் ஜி ஜின்பிங்கிற்கு இடையேயான நல்லுறவுக்கு, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லையில் அமைதியை பேணுவது மிக முக்கியம் என குறிப்பிட்டார்.
மேலும், " உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நீங்கள் சொன்னது போல் 5 வருடங்களுக்கு பிறகு முறைப்படி நடக்கும் சந்திப்பு இதுவே ஆகும். இந்தியா-சீனா உறவுகளின் முக்கியத்துவம்: நமது உறவுகள் நமது மக்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கும் மிகவும் முக்கியம். கடந்த 4 ஆண்டுகளில் எல்லை தாண்டிய ஒருமித்த கருத்தை வரவேற்கிறோம்.
எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர உணர்திறன் ஆகியவை நம் உறவுகளின் அடிப்படையாக இருக்க வேண்டும். இந்த அனைத்து தலைப்புகளிலும் பேச வாய்ப்பு கிடைத்தது. திறந்த மனதுடன் பேசுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடக்க வேண்டி இருந்த நிலையில் பிரதமர் மோடியும் ஜி ஜின்பிங்கும் இந்தியா மற்றும் சீனாவின் தீவிரமான பிரச்சினைகளை சுமார் 50 நிமிடங்கள் உரையாடினர். கூட்டம் முடிந்ததும், பிரதமர் மோடியும், ஜி ஜின்பிங்கும் சந்திப்பு அறையிலிருந்து சிரித்துக்கொண்டே வெளியே வந்து ஒருவரையொருவர் அன்புடன் கைகுலுக்கிக்கொண்டனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு நடைபெற்றபோது, பிரதமர் மோடியும், அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கொண்டனர். ஆனால் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இருதரப்பு சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை. இதற்கு முன்பும், 2022-ம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி நகரில் 'ஜி-20' கூட்டம் நடைபெற்றபோதும், பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜி ஜின்பிங் இடையே முறையான இருதரப்பு பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *