புதிய வரி விதிப்பு முறையில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்க முடியாது - டிரம்ப்!

- Muthu Kumar
- 06 Mar, 2025
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா உட்பட மற்ற நாடுகள் விதிக்கும் வரியை போலவே அமெரிக்காவும் வரி விதிக்கும்.இந்த நடைமுறை ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும்'' என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜன.20-ம் தேதி 2-வது முறையாக அதிபராக பதவியேற்றார். அதிபர் பதவியேற்ற பிறகு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முதல் முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை ட்ரம்ப் உரையாற்றினார்.
அப்போது அவர் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது. இதேபோல் மற்ற நாடுகளும் அதிக வரி விதிக்கின்றன. இது நியாயமற்றது. ஆட்டோமொபைல் பொருட்களுக்கு 100 சதவீதத்துக்கும் அதிகமாகவே இந்தியா வரி விதிக்கிறது. ஐரோப்பிய யூனியன், இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா போன்ற நாடுகள், நாம் விதிக்கும் வரியை விட அதிக வரிகளை விதிக்கின்றன.
அதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? எனவே, மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கின்றனவோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் வரி விதிக்கும். இந்த நடைமுறை ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பது பல ஆண்டுகளாக உள்ளது. இப்போது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. வர்த்தக கொள்கைகளில் அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் சமமற்ற நிலை உள்ளது. அதை சரி செய்வதற்குதான் பரஸ்பரம் வரி விதிக்கும் முறையை அமல்படுத்த நினைக்கிறேன்.
புதிய வரி விதிப்பு முறையில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். இந்த விஷயத்தில் யாரும் என்னிடம் விவாதம் நடத்த முடியாது. மற்ற நாடுகள் அவர்களுடைய சந்தைகளில் இருந்து அமெரிக்காவை விலக்கி வைக்க பணமற்ற கட்டணங்களை (non-monetary tariffs) செயல்படுத்தினால், நமது சந்தைகளில் இருந்து அந்த நாடுகளை தள்ளி வைக்க பணமற்ற தடைகளை உருவாக்குவோம். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் பேசினார்.
அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வர்த்தக உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஏப்ரல் 2-ம் தேதிக்கு பிறகு அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பு அதிகரிக்கும். இதன்மூலம் வர்த்தகம் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *