அன்வாரின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட எதிர்பார்ப்புகளோடு இந்தியர்கள்!
- Muthu Kumar
- 16 Oct, 2024
கோலாலம்பூர், அக்.16-
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யவிருப்பதால் அதுகுறித்து பல எதிர்பார்ப்புகளை நம் இந்தியர்கள் கொண்டிருக்கின்றனர். இந்த வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, விளையாட்டுத் துறைகளில் இந்தியர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு சற்று கூடுதலாக இருந்தால் சிறப்பாக இருக்கும். சிறுதொழில் வணிகர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பட்ஜெட் சற்று அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும். இவையனைத்தும் பிரதமர் துறையின் கீழ் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த ராஜரத்தினம் தெரிவித்தார்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாய மருத்துவப் பரிசோதனையை அமல்படுத்த வேண்டும். அதற்கு ஒருவர் மருத்துவப் பரிசோதனை அறிக்கையைத் தயார் செய்ய வெ.500 வீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நாட்டின் மனித வளம் நோய்வாய்ப்பட்டால் உற்பத்தியை நாம் அதிகரிக்க முடியாமல் போய் விடும். மக்கள் ஆரோக்கியமாக இருக்க மருத்துவப் பரிசோதனை செய்யும்படி அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். இதற்கான பணத்தை மக்களிடம் கொடுக்க முடியாது.
அடையாள அட்டையைக் கொடுத்து முன்பதிவு செய்து முழுமையான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு இந்த மருத்துவ அறிக்கையை அவர்கள் வைத்துக் கொள்ளலாம். இதைக் கட்டம் கட்டமாக ஏழை மக்கள், பி40, எம்40 என அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும். தற்போது யாரும் உடற்பயிற்சி செய்வதில்லை; சரியான உணவுப் பழக்கங்களைக் கண்காணிப்பதில்லை; தங்களுக்கு எப்போது நீரிழிவு ஏற்பட்டு காலைத் துண்டாக்கும் நிலைமை வருகிறதோ அப்போதுதான் இவர்கள் மருத்துவமனையில் பரிசோதனை செய்யச் செல்கிறார்கள்.
அதன் பிறகு அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய மருந்துகள் அனைத்தும் நோயின் இறுதிக் கட்டத்திற்குரிய மருந்துகளாக இருக்கின்றன. அவை குணப்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டிருக்காவிட்டாலும் இவர்கள் அம்மருந்தை உட்கொண்டு காலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுவார்கள். இம்மருந்துகளுடன் மருத்துவப் பரிசோதனையையும் மக்கள் கட்டாயம் மேற்கொள்ள அரசாங்கம் வழி வகுக்க வேண்டும் என்று பூச்சோங்கைச் சேர்ந்த பழனி வலியுறுத்தினார்.
இதனிடையே இந்த பட்ஜெட்டில் உதவித் தொகையைச் சற்றுக் கூடுதலாக அதிகரிக்க வேண்டும். காரணம், பொதுச்சேவை ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு இருக்கும் வேளையில் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கப்படுவதில்லை. வறுமையில் இருப்பவர்கள் தொடர்ந்து அதே நிலையில்தான் இருக்கின்றனர், மாறாக வளர்ச்சியடையவில்லை. இ-காசே திட்டத்தில் கொடுக்கப்படும் வெ.1,500இல் அரிசி, தேங்காய், மண்ணெண்ணெய் போன்றவற்றை வாங்க முடியாது. இவை எல்லாம் கட்டுப்பாட்டுடன்தான் வழங்கப்படுகிறது. தற்போது மருத்துவமனைக்குச் சென்றால் அனைத்துக்கும் கட்டணம் விதிக்கப்படுகிறது. இவையனைத்தையும் தளர்த்தி எரிவாயுவின் விலையைக் குறைக்க வேண்டும். பெட்ரோலின் விலை சற்று குறைந்தால் நன்றாக இருக்கும். செர்டாங்கிலுள்ள டோல் சாவடியை அகற்ற வேண்டும் என்று பூச்சோங்கைச் சேர்ந்த விநோதன் கேட்டுக் கொண்டார்.
இதே போல் பேசிய பூச்சோங், கின்றாராவைச் சேர்ந்த சிவா. இந்த 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்திய மாணவர்களின் கல்விக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்க வேண்டும்; இந்தியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; தொழில் ரீதியாக இந்தியர்களுக்கு அதிகமான நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *