நகர்ந்து சென்ற விண்கல்லை படம் பிடித்த இந்தியாவின் GROWTH-india தொலைநோக்கி!

top-news
FREE WEBSITE AD

இந்தியாவின் லடாக்கில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் முழுமையான ரோபோ ஆப்டிகல் ஆராய்ச்சி தொலைநோக்கி, பூமிக்கு நெருக்கமாக வந்த 380 அடி அளவுள்ள விண்கல்லை துல்லியமாக படம்பிடித்திருக்கிறது.

நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வருகிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக்கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது.

அந்த வகையில் பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கற்களை அடையாளம் கண்டு அதன் பாதையை கணித்து, அச்சுறுத்தல் இருக்கிறதா? என்பதை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அதாவது ஜூலை 26ம் தேதி, பூமிக்கு நெருக்கமாக சுமார் 380 அடி அளவு கொண்ட விண்கல் கடந்து செல்ல உள்ளதை முன்கூட்டியே கணித்து அறிவித்தனர்.

2011 MW1' எனும் பெயர் கொண்ட இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 75 லட்சம் கி.மீ தூரத்தில் பூமியை கடந்திருக்கிறது. இந்த தொலைவு மிக நீண்டதாக தெரியலாம். ஆனால் விண்வெளியை பொறுத்த அளவில் இது மிகக் குறைவான தூரம்தான். பூமியிலிருந்து செவ்வாய்க்கு 5.4 கோடி கி.மீ தொலைவு இருக்கிறது. அப்படியெனில் 75 லட்சம் கி.மீ என்பது பூமிக்கு மிக நெருக்கம்.

நிலவுடன் ஒப்பிடும்போது, பூமிக்கும் நிலவுக்கும் இடையே இருக்கும் தொலைவை விட 15 மடங்கு தூரத்தில் இந்த விண்கல் கடந்து சென்றிருக்கிறது. 28,946 கி.மீ வேகத்தில் சென்ற இந்த விண்கல், அதன் பாதையில் சிறிய மாற்றம் ஏற்பட்டிருந்தால் கூட பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆனால், தற்போது இப்படியான ஆபத்து எதுவும் இல்லை என நாசா கூறுகிறது.

இப்படி இருக்கையில் இந்த விண்கல் பூமியை நெருக்கமாக கடந்து சென்றதை லடாக்கில் உள்ள இந்தியாவின் முதல் முழுமையான ரோபோ ஆப்டிகல் ஆராய்ச்சி தொலைநோக்கி அழகாக படம்பிடித்திருக்கிறது.

இந்த தொலை நோக்கியை GROWTH-india தொலைநோக்கி என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலகின் மிக உயரமான இடங்களில் அமைந்துள்ள தொலைநோக்கிகளில் இதுவும் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 மீட்டர் உயரத்தில் இந்த தொலை நோக்கி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரோபிசிக்ஸ் மற்றும் மும்பை ஐஐடியால் இது உருவாக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. பிரபஞ்சத்தில் நிகழும் மாற்றங்களை ஆய்வு செய்வதுதான் இதன் வேலை.

இந்தியாவை சேர்ந்த தொலை நோக்கி ஒன்று, சுமார் 29 ஆயிரம் கி.மீ வேகத்தில் நகர்ந்து சென்ற விண்கல்லை படம் பிடித்தது இதுவே முதல்முறை என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை மும்பை ஐஐடியின் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் வானியற்பியல் ஆராய்ச்சி (ஸ்டார்) ஆய்வகத்தின் வானியற்பியல் நிபுணரான வருண் பலேராவ் தனது x தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *