இந்தியாவின் 18 வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று துவங்கியது!
- Muthu Kumar
- 24 Jun, 2024
18வது லோக்சபாவின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பார்லிமென்ட் அரசியலில் இன்றைய தினம் பெருமைக்குரியது மட்டுமல்ல கொண்டாட்டத்திற்குரியது. சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக புதிய நாடாளுமன்றத்தில் புதிய எம்.பி.,க்களுடன் அவை கூடுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் புதிய எம்.பி.,க்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.
நாடாளுமன்ற கூட்டம் அனைத்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும். சாதாரண மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றும் நாடாளுமன்ற கூட்டமாக இது இருக்கும். புதிய உத்வேகம், புதிய உற்சாகத்துடன் பணிகளை துவங்க வேண்டிய பணி நம் முன் இருக்கிறது. 2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம்.
உலகத்தின் பெரிய தேர்தல் பெருமைக்குரிய வகையில் நிறைவு பெற்றிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையளிக்கும் விஷயம். 60 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை மக்கள் கொடுத்துள்ளனர். இது நாடாளுமன்றத்திற்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கிறது. ஆட்சியை வழிநடத்த பெரும்பான்மை முக்கியம், நாட்டை வழிநடத்த ஒத்துழைப்பு முக்கியம். 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான உழைப்பை முழுமையாக தருவோம்.
கடமை, செயல்பாடு மற்றும் கருணையுடன் எங்களது ஆட்சி நடைபெறும். அனைவரையும் ஒருங்கிணைத்து நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும். எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட ஜூன் 25 இந்திய அரசியலில் ஒரு கருப்பு நாள். 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ஜனநாயகத்தை காக்க நாம் முழுமையாக முயற்சிப்போம். 3வது முறை ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம். இரண்டு முறை அரசை வழிநடத்திய அனுபவம் எங்களுக்கு உள்ளது.
நிலையான ஆட்சியே நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எதிர்க்கட்சிகளின் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேசத்திற்கு ஒரு நல்ல மற்றும் பொறுப்பான எதிர்க்கட்சி தேவை.
18வது நாடாளுமன்ற இந்திய ஜனநாயகத்திற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை எதிர்க்கட்சிகள் பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *