ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா பயணம்!
- Muthu Kumar
- 09 Sep, 2024
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் ஒருபகுதியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த வாரம் மாஸ்கோ செல்லவுள்ளார். உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளை ரஷ்ய அதிகாரிகளுடன் அவர் முன்னெடுப்பார் என்றே கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவுக்கு வருகை புரிந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்பில் ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் உக்ரைன் சென்றிருந்த பிரதமர் மோடி, நாங்கள் இந்தியர்கள் நடுநிலை வகிக்கவில்லை என்றும், தொடக்கத்தில் இருந்தே நாங்கள் யார் பக்கம் என்பதில் தெளிவாக இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
அமைதியை விரும்பும் பக்கத்தை இந்தியா தேர்வு செய்திருந்ததாக குறிப்பிட்ட மோடி போருக்கு இடமில்லாத புத்தரின் தேசத்தவர்கள் நாங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
உக்ரைனில் அமைதி திரும்ப, போர் முடிவுக்கு வர இந்தியா முதன்மையான பங்காற்றும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் அப்போது பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் வகையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்ல உள்ளார்.
ஜனாதிபதி புடின் மற்றும் ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை முன்னெடுப்பார். இதனிடையே ஒப்புக்கொள்ளப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்றும் மாறாக உக்ரைனின் கோரிக்கைகளுக்காக அல்ல என்று விளாடிமிர் புடின் அழுத்தமாக தெரிவித்துள்ளார். ஆனால் உக்ரைன் மண்ணில் இருந்து ஒரு அங்குலம் கூட ரஷ்யாவிடம் ஒப்படைக்க முடியாது என்றே உக்ரைன் அறிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *