வர்த்தகரின் கேள்விக்கு பதிலளிக்காமல் விழித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்?

- Muthu Kumar
- 17 May, 2024
மும்பையில் இந்திய நிதிச் சந்தைக்கான தொலைநோக்குப் பார்வை என்ற தலைப்பில், பங்கு முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.இதில் இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் பங்கு வர்த்தகம் செய்யும் இடைத்தரகர் சரமாரி கேள்வி எழுப்பினார். அவர் கூறியதாவது: இன்று இந்த மத்திய அரசு பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் புரோக்கரை விட அதிகமாக லாபம் சம்பாதிக்கிறது.
முதலீட்டாளர்கள் மற்றும் தரகர்கள் பங்கு முதலீட்டின்போது நிறைய ரிஸ்க் எடுக்கிறார்கள், ஆனால் அரசு அப்படியெல்லாம் செய்வதில்லை. நாங்கள் உழைக்கும் பங்குதாரராக இருக்கிறோம். நீங்கள் (மத்திய அரசு) செயல்படாத பங்குதாரராக இருக்கிறீர்கள். முதலீட்டாளர்கள் ஒவ்வொன்றுக்கும் வரி செலுத்த வேண்டியுள்ளது. ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, முத்திரை வரி, பங்கு பரிவர்த்தனை வரி மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரி என ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வரி செலுத்த வேண்டியிருக்கிறது.
இதனால், செயல்படாத பங்குதாரரான அரசு, பங்கு புரோக்கரை விட அதிகமாக வருவாய் ஈட்டுகிறது. சம்பாதித்த பணத்தில் வீடு வாங்கும்போது கூட இப்படித்தான் வரி போடுகிறீர்கள். மும்பை வாசி என்ற முறையில் நான் ஒன்றை கூறுகிறேன். மும்பையில் உள்ள ஒவ்வொருவரும் சொந்த வீடு வாங்க வேண்டும் என விரும்புவார்கள். நாங்கள் வரி செலுத்தியது போக எஞ்சியதைத்தான் வங்கியில் போட்டு வைத்துள்ளோம்.
ஆனால், வீடு வாங்கும் போது 11 சதவீத வரி போடுகிறீர்கள். ரொக்கமாக வாங்கிக் கொள்வது கிடையாது. வரி செலுத்தியது போக வங்கியில் போட்டு வைத்துள்ள எனது சொந்த பணத்தில் வீடு வாங்கினால் கூட முத்திரைத்தாள் வரி, ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து 11 சதவீதம் வரி செலுத்த வேண்டியுள்ளது. அப்படியென்றால் சாமானிய மக்கள் வீடு வாங்குவது எப்படி? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய நிர்மலா சீதாராமன், செயல்படாத பங்குதாரரால் எப்படி இங்கு அமர்ந்து பதில் சொல்ல முடியும் என மழுப்பினார். அதற்கு மேல் பங்கு தரகர் எழுப்பிய கேள்விக்கு அவரால் எதுவும் கூற முடியவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *