பாஜக மாநில தலைவர் தேர்தலுக்கு அண்ணாமலை விருப்பமனு தாக்கல் செய்யவில்லை!

- Muthu Kumar
- 11 Apr, 2025
பாஜக மாநில தலைவர் தேர்தலுக்கு விருப்பமனு தாக்கல் இன்று நடைபெறுகிறது. தமிழக பாஜகவில் மாநில தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இவ்விரு பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என தமிழக பாஜக தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மாநில தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் தேர்தலுக்கான விருப்பமனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏப்.11-ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இவரை கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்து பூர்வமாக ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில தலைவருக்கான தேர்தல் நாளை (ஏப்.12-ம் தேதி) நடைபெறும் என்றும் 13-ம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டு புதிய தலைவர் பதவியேற்பார் என்றும் இதற்கான ஏற்பாடுகள் சென்னை வானகரத்தில் உள்ள வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற்று வருவதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநில தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்று தமிழக பாஜக தகுதி நிர்ணயம் செய்துள்ளது. இதன் காரணமாக, தற்போதைய தலைவர் அண்ணாமலை, அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து எம்.எல்.ஏவாக பதவி வகித்து வரும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
கடந்த மாதம் டெல்லி சென்ற அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு, 'மாநில தலைவர் போட்டியில் நான் இல்லை,' என செய்தியாளர்களிடம் திட்டவட்டமாக கூறியிருந்தார். ஆனாலும், பாஜக தொண்டர்கள் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றக்கூடாது என அவருக்கு தொடர்ந்து ஆதரவு குரல் எழுப்பி வந்தனர்.
அதேவேளையில், நயினார் நாகேந்திரன் டெல்லியிலேயே முகாமிட்டிருந்ததால், அடுத்த மாநில தலைவர் அவர் தான் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மயிலாப்பூரில் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை, அதன்பிறகு, ஒரு தனியார் தொலைக்காட்சியிடம், 'மாநில தலைவர் தேர்தலுக்கான போட்டியில் நான் விருப்பமனு தாக்கல் செய்ய போவதில்லை. போட்டியிட போவதும் இல்லை,' என தெரிவித்துள்ளார். இதன்மூலம், மாநில தலைவருக்கான தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *