பழநி நகரமே விழாக்கோலம் காணும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு!

top-news
FREE WEBSITE AD

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பழநியில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' இன்று (ஆக.24) கோலாகலமாக தொடங்கியது.

தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ளவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.





இன்று காலை 8.30 மணியளவில் (மலேசிய நேரம் 11:00) திருவிளக்கு ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாநாடு நடைபெறும் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் 100 அடி கம்பத்தில் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மாநாட்டு இலச்சினை (லோகோ) பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்தார்.





காலை 9 மணிக்கு மாநாட்டு கண்காட்சியை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.வேல்கோட்டத்தை சச்சிதானந்தம் எம்.பி, செந்தில்குமார் எம்எல்ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாநாட்டு விழா மலர் மற்றும் ஆய்வு மலர் வெளியிடப்பட்டது.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.'பழநியில் நடக்கின்ற இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு ஆன்மிக வரலாற்றிலேயே மிகச் சிறப்பான இடத்தைப் பெறும்' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தொடர்ந்து நடந்த விழாவில் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன் வரவேற்றார். தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டை முன்னிட்டு காலை முதலே பதிவுசெய்த பங்கேற்பாளர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரண்டனர். கண்காட்சி அரங்கில் திருமுருகனின் ஓவிய காட்சியரங்கம், 3டி திரையரங்கம் மற்றும் விஆர் (விர்ச்சுவல் ரியலாலிட்டி) அரங்கம் மற்றும் ஆன்மிக நூல்களின் புத்தக் கண்காட்சி இடம் பெற்றிருந்தது.

மாநாட்டில் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.

மாநாட்டுக்காக வந்துள்ள பக்தர்கள் டிஜிட்டல் திரையில் மாநாட்டு நிகழ்வுகளை கண்டு ரசித்த்து வருகின்றனர். மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டு வளாகத்தில் 2,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட அரங்கம், 500 பேர் சாப்பிடும் உணவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள 3-டி திரையரங்கில் பா.விஜய் இயக்கிய முருகனின் பெருமைகள் கூறும் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.



அறுபடை வீடுகண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு முடிந்து ஒரு வாரத்துக்குக் கண்காட்சியை பக்தர்கள், பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாநாட்டில் 50,000 பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது. மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். மாநாடு நடைபெறும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ழநி பேருந்து நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு வந்து செல்ல 10 பேட்டரி கார்கள், மாநாடு வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோரைஅழைத்துச் செல்ல 10 பேட்டரிகார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


மாநாட்டு நிகழ்ச்சிகளை 22 இடங்களில் எல்இடி திரைகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.மாநாட்டையொட்டி 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாநாட்டை முன்னிட்டு பழநி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *