குழந்தையை கடத்தியவனிடமிருந்து வருவதற்கு மனமில்லாத குழந்தை!
- Muthu Kumar
- 31 Aug, 2024
இந்திய மாநிலமான ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதர் காவல் நிலையத்திற்கு 14 மாதங்களுக்கு முன்பு குழந்தை காணாமல் போனதாக புகார் வந்தது.
தன்னுடைய 11 மாத பிருத்வி என்ற குழந்தையை காணவில்லை என்று தாய் புகார் அளித்தார். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது குழந்தை கடத்துபவர்களிடம் விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை. இதனால் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு தகவல் தெரிவித்தால் தலா ரூ. 25,000 பரிசு வழங்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்தனர்.
பின்னர், தனிப்படை காவல்துறை உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா, ஆக்ரா, அலிகார் உள்பட பல்வேறு இடங்களில் தேடி குழந்தை கடத்தியவரை பிடித்தனர்.அப்போது கடத்தப்பட்ட அந்த குழந்தை கடத்தியவரிடம் இருந்து பிரிய மனமில்லாமல் கதறி அழுதது. இருந்தாலும் குற்றவாளியிடம் இருந்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் குழந்தை கடத்தியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த தனுஜ் சாஹர் என்பவர் குழந்தையை கடத்தியுள்ளார்.இவர் அலிகரில் உள்ள ரிசர்வ் பொலீஸ் லைனில் ஏட்டாக வேலை செய்து வந்தவர். பின்னர் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல்துறையின் சிறப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவில் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் குழந்தையை கடத்தி மொபைல் போனை பயன்படுத்தாமல் அடிக்கடி தான் இருக்கும் இடத்தையும் மாற்றி வசித்து வந்துள்ளார்.தன்னுடைய அடையாளத்தை மாற்றுவதற்காக தாடி வளர்த்து வந்துள்ளார். அதற்கு அடிக்கடி டையும் அடித்துள்ளார்.
இவர் அலிகார் சென்றுள்ளதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அப்போது குழந்தையுடன் வயல்வெளியில் தப்பியோட முயற்சித்துள்ளார்.8 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று தனிப்படை போலீசார் அவரைப் பிடித்தனர். பின்னர் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்" என்றனர்.அதன்பின் இந்த வேடிக்கையான சம்பவம் நடந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *