மீண்டும் காவிரி கரை படித்துறை பகுதியில் கண்டு எடுக்கப்பட்ட ராக்கெட் குண்டு!

- Muthu Kumar
- 24 Nov, 2024
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே, அந்தநல்லுார் சிவன் கோவில் அருகே, காவிரி ஆற்றின் படித்துறையில், கடந்த அக்., 30ல், வெடிக்காத நிலையில், ராக்கெட் குண்டு கண்டு எடுக்கப்பட்டது.
ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வான் வழியாக பறந்து சென்று இலக்கை தாக்கும் வகையில், வடிவமைக்கப்பட்ட அந்த ராக்கெட் குண்டு, வால் பகுதியில் அடைக்கப்பட்ட எரிபொருள் எரிந்த நிலையில் காணப்பட்டது. முனைப்பகுதியில் நிரப்பிய வெடிபொருள் மட்டும் வெடிக்காமல் இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார், சோதனைக்கு பின், ராணுவத்தினர் முன்னிலையில் கொள்ளிடம் ஆற்றில், மணல் பரப்பில் புதைத்து வெடிக்க செய்தனர்.
இந்நிலையில், இதற்கு முன் ராக்கெட் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட இடத்தில் அருகே மீண்டும், ஒரு ராக்கெட் குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீனவர் வலையில் சிக்கிய அந்த ராக்கெட் குண்டும், வால் பகுதி எரிந்த நிலையில், வெடிபொருள் நிரப்பிய முனைப்பகுதி வெடிக்காமல் உள்ளது.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: காவிரி கரை படித்துறை பகுதியில் கண்டு எடுக்கப்பட்ட ராக்கெட் குண்டு, உள்நாட்டு தயாரிப்பாக தெரியவில்லை.
அதன் வடிவமைப்பை வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்ததில் வெளிநாட்டு தயாரிப்பாக இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த ராக்கெட் குண்டுகள் எப்படி காவிரி ஆற்றுக்குள் வந்தன என்பதை விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தொடர்ந்து இரண்டாவது முறையாக, ராக்கெட் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
காவிரி கரையில் சோதனை நடத்தினால் மேலும் பல ராக்கெட் குண்டுகள் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், இதற்கு முன் ராக்கெட் குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட போது, சரி வர சோதனை நடத்தி இருந்தால், தொடர்ந்து ராக்கெட் குண்டு சிக்கியிருக்காது என கூறப்படுகிறது. மேலும், பயங்கரவாத குழுக்கள் இந்த குண்டுகளை மறைத்து வைத்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன் வரை செயல்பட்டு வந்த விடுதலைப் புலிகள் விட்டுச் சென்ற குண்டுகளாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.எனவே, இனிமேலாவது முறையாக விசாரணை நடத்தி, ராக்கெட் குண்டுகள் எங்கிருந்து வந்தன என்பதை போலீசார் கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *