நவீன் பட்நாயக் எடுத்த முடிவினால் மோடி அதிர்ச்சி!
- Muthu Kumar
- 26 Jun, 2024
தேசிய ஜனநாயகக் கூட்டணி அங்கம் வகிக்கும் எம்.பி கள் இன்று புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் பொறுப்பேற்ற நிலையில் ஒரிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சி பா.ஜ.கவுக்கு இதுவரை அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாவிட்டாலும் பாஜக-வுக்கு பிஜு ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் இனி பிரச்சினை அடிப்படையில் கூட பா.ஜ.வுக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு அளிக்காது என திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
கடந்த 2 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த மோடி அரசு, இந்த முறை கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனே ஆட்சியில் அமர்ந்துள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்கட்சியாக அமர்ந்துள்ளது.
இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒடிசாவில் 21 தொகுதிகளில் 20-ல் பா.ஜ.க வெற்றி பெற்றது. மேலும் சட்டசபைத் தொகுதிக்கான தேர்தலில் பிஜு ஜனதாதளம் ஆட்சியை இழந்தது. 141 தொகுதிகளில் 51 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. நவீன் பட்நாயக்கின் 25 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுரை எழுதியது பா.ஜ.க. மேலும் தேர்தல் பிரச்சாரத்திலும் பிஜு ஜனதா தளத்தினை கடுமையாகச் சாடியது பா.ஜ.க. இந்த சம்பவங்கள் எல்லாம் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக்கிற்கு கோபத்தினை ஏற்படுத்த கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள், எம்.பிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் துவங்கிய முதல் நாளில் பா.ஜ.வுக்கு அளித்த வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கிறார். மேலும் நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்படவும், ஒடிசாவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் இனி தங்கள் குரல் ஒலிக்கும் எனவும் நவீன் பட்நாயக் தெரிவித்திருக்கிறார்.ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியில் அமர்ந்துள்ள பா.ஜ.வுக்கு நவீன் பட்நாயக்கின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜ்ய சபாவில் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு 9 எம்.பிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *