முப்பது ஆண்டுகளாக எந்த ஒரு நடவடிக்கை காணாத கோலா லங்காட் தொழிலாளர்கள் வீட்டுடைமைத் திட்டம்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

பந்திங், அக்.13-

நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருவதாகச் சொல்லப்படும் கோலலங்காட் மாவட்ட ரீதியில் உள்ள மூன்று தோட்டங்களில் தொழிலாளர்கள் வீட்டுடைமைத் திட்டம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் காணப்படாமல்  இருப்பதோடு இந்தப் பிரச்சினைக்கு எப்போதுதான் தீர்வு என்ற கேள்வியுடன் ஒரு சந்திப்புக் கூட்டம் நேற்று முன்தினம் இங்கு கோலலங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த மாவட்டத்தில் இருக்கும் தும்போக் தோட்டம், டுசுன் டுரியான் தோட்டம் மற்றும் கேரித் தீவு ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 336 குடும்பங்களின் வீட்டுடைமைத் திட்டம் பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இன்னமும் இழுபறி நிலை யில் இருந்து வருவதாக இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய கோலலங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ராமசாமி தெரிவித்தார்.

நீண்ட காலமாக பேச்சளவில் இருந்து வரும் இந்த மூன்று தோட்டங்களின் தொழிலாளர்கள் வீட்டுடைமைத் திட்டம் செயலளவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இது குறித்து விவாதிப்பதற்காக மனிதவள மக்கள் நலப்பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் தலைமையில் ஓர் அவசர சந்திப்புக் கூட்டத்தை தாம் ஏற்பாடு செய்திருந்ததாக கோலலங்காட் கெ அடிலான் தொகுதித் தலைவருமான அவர் கூறினார்.

இந்த சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட நிலஇலாகா அதிகாரிகள் மற்றும் நகராண்மைக் கழக அதிகாரிகள் முன்னிலையில் தோட்டப் பாட்டாளிகளின் வீட்டுடைமைத் திட்டம் முழுமை பெறுவதற்கான வழிமுறைகளும் அதற்கான தீர்வையும் காண வேண்டிய கட்டாயத்தில் அது குறித்து தாம் விவாதித்ததாக ஹரிதாஸ் தெரிவித்தார்.

தும்போக் தோட்டம் விற்கப்பட்ட போது அங்கிருந்த தமிழ்ப்பள்ளி ஆலயத்திற்கு நிலம் மற்றும் எட்டு குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டிய கொடுக்கப்பட்ட வாக்குறுதி கள் இன்னமும் நிறை வேற்றப்படவில்லை. இதே போன்று டுசுன் டுரியான் தோட்டத்தைச் சேர்ந்த 108 குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டம் கடந்த 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 15 விழுக்காடு மட்டுமே பூர்த்தியான நிலையில் தொங்கா அருள்மிகு துரௌபதி அம்மன் ஆலயத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் தற்போது அப்பகுதி புல் புதர் செடி கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது. மேலும், கேரித் தீவு பகுதியில் சைம் டார்பி நிறுவனத்திற்கு சொந்தமான தோட்டங்களில் வசித்து வந்த 220 தொழிலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுவதற்கு 40 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்தத் திட்டம் தொடர்பில் இதுவரை எந்தவித

மேம்பாடும் காணப்படவில்லை என்று தமது ஆதங்கத்தை ஹரிதாஸ் சந்திப்புக் கூட்டத்தில் தெளிவுபடுத்தினார்.

எனவே, இந்த மூன்று தோட்டங்களின் தொழிலாளர்கள் வீட்டுடைமைத் திட்டம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு உதவியுடன் இந்தத் தவணைக்குள் தீர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் மூன்று தோட்டங்களின் தொழிலாளர்கள் வீட்டுடைமைத் திட்டம் முழுமை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து செயல்படுத்திட வருகின்ற கூட்டங்களில் விவாதித்து நல்ல முடிவை தாம் எடுக்க விருப்பதாக கூட்டத்தை நிறைவு செய்த பந்திங் சட்ட உறுப்பினருமான பாப்பாராய்டு உறுதி அளித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *