தென்கொரியாவில் போர் விமான பயிற்சியில் பொதுமக்கள் மீது குண்டுவீச்சு!

- Muthu Kumar
- 07 Mar, 2025
தென் கொரியாவின் போச்சான் பகுதியில், தென் கொரிய ராணுவமும், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டது.அப்பொழுது காலை 10 மணியளவில் தென் கொரிய விமானப் படைக்கு சொந்தமான KF16 ரக போர் விமானங்கள் இரண்டு பயிற்சியில் ஈடுபட்டன.
பயிற்சியின் போது இரு விமானத்தில் இருந்தும், தவறுதலாக அங்குள்ள கிராமம் ஒன்றின் மீது 8 MK82 ரக குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இந்த குண்டு வீச்சில், ஒரு தேவாலயமும், அங்கிருந்த வீடுகளும் சேதமடைந்துள்ளன. இதில் அங்கிருந்த 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தென்கொரியா விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த விபத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு வருந்துவதோடு, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறோம்.மேலும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, அங்கு வெடிக்காத குண்டுகள் எதுவும் உள்ளதா என தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையில், குண்டுகள் ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.தற்போது அந்த பகுதியில் போர் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வடகொரியாவிலிருந்து அச்சுறுத்தல்கள் உள்ள நிலையில், போர் பயிற்சியின் போது குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *