நாட்டு பிரச்சனைக்கு மத்தியில் டாடாவிற்கு இரங்கல் செய்தி- இஸ்ரேல் பிரதமர்!
- Muthu Kumar
- 13 Oct, 2024
இஸ்ரேல் நாட்டிற்கு இப்போது எந்தளவுக்கு பிரச்சினைகள் நிலவி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இத்தனை பிரச்சினைக்கு நடுவிலும் ரத்தன் டாடா மறைவைக் கேட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருத்தமடைந்துள்ளார்.மேலும், ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதமும் எழுதியுள்ளார்.
இந்திய நாட்டின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா கடந்த அக். 9ம் தேதி உயிரிழந்தார். ரத்த அழுத்தம் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.அவரது உடலுக்கு வியாழக்கிழமை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. ரத்தன் டாடா மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தற்பொழுது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு டாடா மறைவுக்கு எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்தது மட்டுமின்றி கடிதமும் எழுதியுள்ளார். மத்திய கிழக்கில் இப்போது எந்தளவுக்குப் பிரச்சினை நிலவி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஈரான் என்று சுற்றிச் சுற்றி மோதல் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாகச் சமீபத்தில் இஸ்ரேல் மீது ஈரான் மிகப் பெரிய ஏவுகணை தாக்குதலை நடத்தியிருந்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மோதல் பெரிதாக வெடிக்கலாம் என்ற சூழலே நிலவி வருகிறது.
ஆனால், இத்தனை பிரச்சினைக்கு நடுவிலும் தாண்டி டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடிக்கு நெதன்யாகு கடிதம் எழுதியுள்ளார். ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நெதன்யாகு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் சாம்பியன் ரத்தன் டாடா என்றும் குறிப்பிட்டுள்ளார்,
நெதன்யாகு தனது கடிதத்தில், "இந்தியாவின் பெருமைமிக்க மகனும் நமது இரு நாடுகளுக்கு இடையேயான நட்பின் சாம்பியனுமான ரத்தன் டாடாவின் இழப்பிற்கு நானும் இஸ்ரேல் மக்களும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், டாடா குடும்பத்தாருக்குத் தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு நெதன்யாகு பிரதமர் மோடியைக் கேட்டுக் கொண்டார்.
ரத்தன் டாடா மறைவுக்கு உலகின் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.. முன்னதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி, "இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகமும் மாபெரும் இதயம் கொண்ட ஒரு மனிதரை இழந்துவிட்டன. நான் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்ட போது, எனக்கு முதலில் வாழ்த்து சொன்னவரே ரத்தன் டாடா தான்.
தெற்கு கலிபோர்னியா தான் எனது சொந்த ஊர். அந்த ஊருக்கு ரத்தன் டாடா நிறைய விஷயங்களைச் செய்துள்ளார். அதை நான் எப்போதும் மறக்கவே மாட்டேன். இந்தியாவின் எதிர்காலத்திற்காக உழைத்தவர் ரத்தன் டாடா" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதேபோல ரத்தன் டாடாவின் பங்களிப்பை நினைவுகூர்ந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், "இந்தியாவிலிருந்து ஒரு அன்பான நண்பரை பிரான்ஸ் இழந்துவிட்டது. ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பார்வை இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இடையே பல துறைகளில் உறவை மேம்படுத்தியது. அவரது அன்பு மற்றும் மனித நேயத்திற்காக அவர் எப்போதும் நினைவு கூரப்படுவார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
கூகுள் தலைமை சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் போன்ற பல முக்கிய தொழிலதிபர்கள், சர்வதேச நாடுகளின் தலைவர்களும் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *