எம்.ஜி.ஆர் பிறந்த வடகன்னிகாபுரம் ஊரின் ரயில் நிலையத்தை மூட வேண்டாம்- மக்கள் கோரிக்கை!

top-news
FREE WEBSITE AD

எம்ஜிஆர் இலங்கையின் கண்டியில் பிறந்தாலும், குழந்தைப் பருவத்திலேயே கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடகன்னிகாபுரத்துக்கு வந்துவிட்டார்.அவரது குழந்தைப் பருவகாலம் முழுவதும் அந்த வடவனூர், வடகன்னிகாபுரம் கிராமங்களில்தான் கழிந்தது.

இந்த வடகன்னிகாபுரத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1898-ல் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. இது தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள பாலக்காடு ரயில்வே டிவிஷனின் கீழ் வருகிறது. இந்த பழமை வாய்ந்த ரயில் நிலையம் பாலக்காடு - பொள்ளாச்சி தடத்தில் அமைந்துள்ளது. 1898 முதல் 2008-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி வரை இந்த ரயில் நிலையம் பெரும் பாலான பயணிகளுடன் இயங்கி வந்தது.

இந்நிலையில் இந்த வடகன்னிகாபுரம் ரயில் நிலையத்தை குறைந்த அளவிலேயே பயணிகள் பயன்படுத்துவதால் நிரந்தரமாக மூடுவதற்கு ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஆனால் இந்த ரயில்வே நிலையத்தை மூடக்கூடாது என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ரயில் நிலையத்தை மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் பி.பாலச்சந்திர மேனன் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார் என்று இங்குள்ள ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

2015-ல் இங்கு அமைக்கப்பட்டிருந்த மீட்டர்கேஜ் பாதை மாற்றப்பட்டு அகல ரயில்பாதை போடப்பட்டது. அதன் பின்னர் பாலக்காட்டிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில் மட்டுமே இங்கு நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே நிறுத்தப்பட்டு வந்த 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதன் பிறகு இங்கு நிறுத்தப்படவில்லை. வடகன்னிகாபுரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து தற்போது ரயில் நிலையத்தை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் தாய் சத்யபாமா, இந்த ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள வடவனூரை சேர்ந்தவர். அவரது நினைவாக வடவனூரில் 'மகோரா' என்ற பெயரில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) என்பதன் சுருக்கமே மகோரா ஆகும்.

இந்த நினைவு இல்லத்தை பாலக்காட்டிலுள்ள இந்தியன் நேஷனல் டிரஸ்ட் ஃபார் ஆர்ட் அன்ட் கல்ச்சுரல் ஹெரிடேஜ் (இன் டாக்) பராமரித்து வருகிறது. இங்கு மிகச் சிறந்த பழங்கால ஓவியங்கள், புகைப்படங்கள், இசை வடிவங்கள், திரைப்படங்களின் தொகுப்பு உள்ளது. ஏராளமான நினைவுகளை சுமந்து கொண்டிருக்கும் இந்த நினைவு இல்லத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வருபவர்கள் இந்த வடகன்னிகாபுரம் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே, இந்த ரயில் நிலையத்தை மூடக்கூடாது என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *