மற்றவரின் நம்பிக்கையில் தலையிடாதீங்க இசைவாணி-ஓய்வுபெற்ற டிஜிபி ரவி!

- Muthu Kumar
- 01 Dec, 2024
I am sorry Ayyappa என்ற பாடலை பாடி பாடகி இசைவாணி சர்ச்சையில் சிக்கி உள்ளார். இந்து மத நம்பிக்கையை புண்படுத்திவிட்டதாக அவர் மீது புகார்கள் கொடுக்கப்பட்டு வரும் சூழலில் தமிழக ஓய்வு பெற்ற டிஜிபி ரவி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்அடுத்தவர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது. இதனை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் 'கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' என்ற இசைக்குழுவில் கானா பாடகி இசைவாணி உள்ளார். இவர் ஐயப்பன் குறித்து பாடிய பாடல் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
''ஐ ஆம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா.. பயம்காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா.. நான் தாடிக்காரன் பேத்தி.. இப்போ காலம் மாறிப்போச்சி" என்று இசைவாணி பாடிய பாடல் தான் விவாதமாகி உள்ளது.
சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலுக்கு பெண்கள் செல்ல தடை உள்ளது. இதனை கேள்வி கேட்கும் வகையில் அவர் இந்த பாடலை பாடியிருந்தார். அடிப்படையில் இசைவாணி கிறிஸ்தவர் என்பதாலும், ஐயப்பன் சாமி பற்றி அவதூறாக பாடல் பாடி இந்து மதத்தையும், பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தி விட்டதாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இசைவாணியை கைது செய்ய வேண்டும் என ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது வரை இசைவாணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்ந்து விவாதமாகி வருகிறது. இந்நிலையில் தான் ஐயப்பன் சர்ச்சை பாடலுக்கு நடுவே அடுத்தவர்களின் நம்பிக்கையை புண்படுத்த கூடாது என்று ஓய்வு பெற்ற டிஜிபி ரவி காணொளி வெளியிட்டுள்ளார். இவர் யார் என்றால் தமிழகத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு வழங்கும் பிரிவில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இதுதொடர்பாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி வெளியிட்டுள்ள காணொளியில் சபரிமலைக்கு பக்தர்கள் நிறைய பேர் போய் கொண்டு இருக்கிறீர்கள். மாலை போட்டு உள்ளீர்கள். பூஜை செய்து வருகின்றனர். அனைவரும் பாதுகாப்பாக போய் வாருங்கள். அங்கு அட்டை பூச்சிகள் அதிகம் இருக்கும். குழந்தைகள் எல்லாம் கூட்டிட்டு போகிறபோது அவர்களுக்கு சரியான தண்ணீர் வேண்டும். இதனால் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்லுங்கள். திரும்பி பத்திரமாக வர வேண்டும். ஐயப்பன் அனைவருக்கும் அருள் புரிவார்.
நான் இந்த இன்ஸ்டாகிராமை பார்த்தபோது நிறைய சர்ச்சைகள், தேவையில்லாத பிரச்சனைக்கு ஒவ்வொருவரும் சர்ச்சை செய்து கொண்டு இருக்கிறார்கள். நமக்கு இருக்கும் நேரமே குறைவு. நமக்கு இருக்கிற கெஞ்சம் நேரத்தில் மகிழ்ச்சியாகவும், இன்பமாகவும் இருக்க வேண்டுமே தவிர சின்ன சின்ன பிரச்சனைகளை வைத்து அடுத்தவர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது. இதனை தவிர்க்க வேண்டும்.
நாம் அனைவரும் யார்? கலாசாரம் மிக்க பண்பாடு மிக்க தமிழர்கள். அப்படி இருக்கும்போது நாம் அடித்து கொண்டு இருக்கக்கூடாது. உண்மை எது? பொய்மை எது? என்று எல்லோருக்குமே தெரியும். அப்படியிருக்கும்போது வீணான சர்ச்சைகள், வீணான விவாதங்களால் நேரம் தான் செலவாகும். நம்முடைய மனதுக்கு மகிழ்ச்சியோ, மக்களுக்கு நன்மையோ கிட்டாது. எனவே நல்ல விஷயங்களை பற்றி பேசுவோம். நல்லதே நடக்கும்'' என்று கூறியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *