இந்தியாவில் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக்கொலை!

top-news
FREE WEBSITE AD

 மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக், மும்பையின் பாந்த்ரா கிழக்கு பகுதியில் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த கொலை சம்பவத்தில் என்ன நடந்தது.. பாபா சித்திக் கொலை செய்யப்பட்டது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

பாந்த்ராவில் (கிழக்கு) நிர்மல் நகரில் உள்ள கோல்கேட் மைதானத்திற்கு அருகிலுள்ள அவரது மகன் எம்எல்ஏ ஜீஷன் சித்திக் அலுவலகத்தில் மாஜி அமைச்சர் பாபா சித்திக் இருந்தார். எம்எல்ஏ அலுவலக நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்த பின் இரவு 9.30 மணியளவில் அலுவலக வளாகத்தில் இருந்து பாபா சித்திக் வெளியேறினார்.

வெளியே வந்த சில நிமிடங்களில் பாபா சித்திக்கை ஒரு கும்பல் சுற்றி வளைத்துள்ளது. கைக்குட்டையால் முகத்தை மறைத்திருந்த மூன்று பேர், தங்கள் காரில் இருந்து இறங்கி பாபா சித்திக்கை சுட்டு உள்ளனர். அலுவலகத்திற்கு வெளியே பட்டாசுகள் வெடித்த நிலையில்.. சரியாக அந்த நேரத்தில் பாபா சித்திக் மீது மூன்று ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.

படுகாயமடைந்த சித்திக் மார்பில் சுடப்பட்டு கீழே விழுந்தார். அவர் உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் இறந்தார். துப்பாக்கிச் சூட்டில் 9.9 மிமீ கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.கொலை செய்யப்பட்ட விதம்.. பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்.. ஆகியவை மூலம் இது கான்டராக்ட் கொலை என்பதை குறிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு பிப்ரவரியில்தான் காங்கிரஸுடனான தனது 40 வருட கால உறவை முறித்துக்கொண்டு அஜித் பவார் தலைமையிலான என்சிபியில் இணைந்தார் பாபா சித்திக். 15 நாட்களுக்கு முன்பு கொலை மிரட்டல் அவருக்கு விடுக்கப்பட்ட நிலையில்.. போலீசார் பாதுகாப்பு உயர்த்தப்பட்டது. அதேபோல் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அலுவலகத்திற்கு வெளியே பட்டாசுகள் வெடித்த நிலையில் அதை பயன்படுத்திக்கொண்டு சித்திக் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

சம்பவம் நடந்த உடனேயே இரண்டு நபர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர், மற்றொருவர் ஹரியானாவைச் சேர்ந்தவர், மூன்றாவது குற்றவாளி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த கொலை வழக்கை விசாரிக்க 5 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக அரசியல், மத கோணத்தையும் ஆய்வு செய்ய உள்ளதாக மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

துப்பாக்கிச் சூடு தசரா அன்று நடந்ததால் அங்கே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதால் இது அரசியல் கொலையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.இந்த வழக்கு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதுடன், இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதை மாநில அரசு உறுதி செய்யும் என்று உறுதியளித்தார்.

இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம், மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினரிடம் பேசினேன். இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உ.பி மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். மூன்றாவது குற்றவாளி தலைமறைவாக உள்ளார் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *