இலவச உணவளித்து உதவிக்கரம் நீட்டும் போர்ட்டிக்சன் ரோட்டரி கிளப்!
- Muthu Kumar
- 13 Oct, 2024
போர்ட்டிக்சன், அக்.13-
போர்ட்டிக்சனில் பசி என்று வருபவர்களுக்கு இலவச உணவளித்து உதவிக்கரம் நீட்டுகிறது போர்ட்டிக்சன் ரோட்டரி கிளப்.கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கி இந்த அன்னதான சேவையை இங்கு போர்ட்டிக்சன் வாழ் மக்களுக்கு மட்டுமல்ல, வெளியிலிருந்து இங்கு வரும் ஏழை மக்களுக்கும் இனம், மதம் பாராமல் மனிதநேயத்துடன் மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறார் அந்த கிளப்பின் முன்னாள் தலைவரும், அதற்கான பொறுப்பாளருமான ஜெக்சன் ராஜ்கபூர்.
இத்திட்டத்திற்கு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் இங்குள்ள சாய் குமரன் உணவகம் என சுட்டிக்காட்டிய அவர், அதன் உரிமையாளருக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூறிக்கொள்வதாகவும் தெரிவித்தார். இங்கு வழங்கப்படும் இலவச உணவை மூன்று தடவைக்கு மேலே வருபவர்களின் விபரங்களை சேகரித்து, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து, அவர்களின் தேவைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான உதவிகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம் என்றார். போர்ட்டிக்சன் ரோட்டரி கிளப் மேற்கொள்ளும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை நேரடியாக நேற்று பார்வையிட்ட ரோட்டரி கிளப் 3303 மாவட்ட கவர்னர் அரவிந்தசாமி கோபிகுமார், அத்திட்டத்தை வெகுவாக பாராட்டினார்.
பசி என்று வருபவர்களுக்கு உணவளித்து, அவர்களின் பசியை தீர்ப்பது என்பது சிறந்த சேவை என்றும் குறிப்பிட்டார். போர்ட்டிக்சனில் பசியால் தவிக்கும் பொதுமக்கள் சற்றும் தயக்கமின்றி, போர்ட்டிக்சன் மற்றும் லுக்குட்டில் அமையப்பெற்றுள்ள சாய் குமரன் உணவகத்தில் ஏற்பாடு செய்துள்ள இலவச உணவை உண்டு உங்கள் பசியை தீர்த்துக்கொள்ளலாம் என்றும், அவை சைவ உணவாக வழங்கப்படும் என்றும் ஜெக்சன் மேலும் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *