பேராக்கில் எந்தவோர் ஆலயமும் என் அனுமதியின்றி உடைபடாது - சிவநேசன்!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.கிருஷ்ணன்)

பத்துகாஜா, மே 27-

பேராக் மாநிலத்தில் இனி எந்தவோர் ஆலயமும் என் அனுமதியின்றி உடைபடாது. தற்போது செக்ஷன் 425ஆவது பிரிவின் கீழ் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. அதாவது அனுமதியின்றி அரசாங்க நிலத்தை பயன்படுத்துவதால் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோட்டிசும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பத்துகாஜாவில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு மக்களை சந்தித்தபோது மனிதவளம், சுகாதாரம், ஒற்றுமை, இந்திய சமூக நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

இங்குள்ள மூன்று ஆலயங்களுக்கு நோட்டிஸ் ஒன்றை நிலவள இலாகாவினர் வழங்கியுள்ளனர். இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகத்தினர் தம்மை தொடர்புகொண்டு பேசியதாக அவர் கூறினார்.
இனிவரும் காலங்களில் ஆலயங்களுக்கு நோட்டீஸ் வழங்குவதற்கு முன்னதாக தம்மிடம் கலந்தாலோசித்து செயல்படும்படி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த பத்துகாஜா வட்டாரத்தில் பூசிங் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம், ஜாலான் பத்துகாஜா மதுரை வீரன் ஆலயம், ஸ்ரீ காளியம்மன் ஆலயம் ஜாலான் தஞ்சோங் துவாலாங் ஆலயங்கள் நோட்டிஸ் கிடைக்கப்பெற்ற ஆலயங்களாகும். இந்த ஆலய நிர்வாகத்தினரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பிரச்சினைகளைக் கேட்டறிந்து தீர்வு காண வழிவகுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, பூசிங் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் தற்போதுள்ள ஆலயம் ஈப்போ லுமூட் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது. இந்த நெடுஞ்சாலையை மறுசீரமைப்பு அல்லது அகலப்படுத்த வேண்டுமென்றால், இந்த ஆலய வளாகம் பாதிப்பை எதிர்நோக்கும். அத்துடன், இந்த நிலம் தனியாருக்கு சொந்தமானதாகும், நமக்கு உரிமை கிடையாது. அதன் அடிப்படையில் இந்த ஆலயத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் புதிய நிலத்தை சுமார் ஒரு ஏக்கருக்கு சற்று குறைவாக அரசாங்கம் வழங்கியுள்ளது. அதோடு, ஆலயம் கட்டித்தரவும் உறுதியளித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் ஆலயத்தலைவர் பாஸ்கரன் தமது ஆலய நிர்வாகத்துடன் கலந்து பேசி ஒரு வாரத்திற்குள் தங்களது முடிவை தம்மிடம் தெரிவிக்கவுள்ளதாக அவர் கூறினார்.இத்தகைய பிரச்சினையை புந்தோங் காளியம்மன் ஆலயமும் எதிர்நோக்கியுள்ளது. அங்குள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்றால் ஆலய வளாகம் பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார்.

ஆகையால், பூசிங் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் விவேகமாக சிந்தித்து இந்த மாற்று நிலத்தை பெற்றுக்கொள்வது மிகவும் சிறப்பாகும். அதே வேளையில் தற்போதைய நிலம் தனியாருக்கு சொந்தமானது. அதற்கு விலையும் அதிகமாகும். அங்கு வணிக மேம்பாட்டுத் தளமாக சீரமைக்கப்படவுள்ளது. அதனால், ஆலய நிர்வாகத்தினர் எதிர்கால நன்மைகள் குறித்து ஆய்வு செய்து மாற்று இடத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளும்படி அவர் ஆலோசனை வழங்கினார்.

தோட்டப்புற ஆலயங்கள், மின்சார வாரிய நிலம் இரயில்வே நிலம், நீர்பாசன வடிகால் நிலங்களில் இருக்கும் ஆலயங்கள் அங்கே இருக்கலாம். எந்தவொரு பாதிப்பும் வராது. ஆனால், நிலத்தை உரிமை கொண்டாட முடியாது. இப்பிரச்சினை நாடு முழுவதும் இருந்து வருகிறது. ஆகவே, இந்த ஆலயங்களை முறைப்படி நிர்வாகம் செய்து தக்கவைத்து கொள்வதுதான் சாணக்கியத்தனம் என்று அவர் குறிப்பிட்டார்.

Kerajaan tidak akan merobohkan mana-mana kuil di Perak tanpa kebenaran. Notis dikeluarkan kerana penggunaan tanah kerajaan tanpa izin, namun notis itu ditangguhkan. Tanah ganti serta bantuan membina kuil baharu telah ditawarkan demi penyelesaian harmoni.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *