நீங்கள் கால் எடுத்து வைத்தால்தான் உள்ளே வர முடியும்! நித்யானந்தா கைலாசாவுக்கு அழைப்பு?
- Muthu Kumar
- 05 Jul, 2024
பரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தா தனது கைலாசா எங்கு உள்ளது என சொல்லியது இல்லை. ஆனால் தற்போது முதல் முறையாக வரும் 21 ஆம் தேதி கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக நித்தியானந்தா சொல்லியிருக்கிறார்.
தன்னைத் தானே கடவுள் என சொல்லிக் கொள்ளும் நித்தியானந்தா குறித்த சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை. பெங்களூர் அருகே இருக்கும் பிடதியில் ஆசிரமம் தொடங்கிய நித்தியானந்தா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அந்த பிரச்சனை ஓய்வதற்குள் பாலியல் வன்கொடுமை பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் நித்தியானந்தா சிக்கினார். தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு நித்தியானந்தா தப்பிச் சென்றார். அப்போது முதல் இப்போது வரை நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. தற்போது கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறிக்கொள்ளும் நித்தியானந்தா, தனி கொடி, பாஸ்போர்ட் ஆகியவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அது மட்டும் இன்றி கைலாசா நாட்டில் குடியேற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கூட அறிவிப்பை வெளியிட்டார். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, தனது கைலாசா நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐநா சபை அங்கீகாரம் கொடுத்ததாக கைலாசாவின் இணைய பக்கத்தில் புகைப்படங்களை நித்தியானந்தா தரப்பு வெளியிட்டது. அதுபோக கைலாசா நாட்டின் பெருமைகள் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு நித்தியானந்தா ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு.
நித்தியானந்தாவுக்கு உடல் நிலை சரியில்லை என கடந்த சில மாதங்களுக்கு முன்பாக செய்திகள் பரவின. பிறகு வழக்கம் போல யூடியூப் பக்கம் வழி தனது சொற்பொழிவுகளை தொடங்கினார் நித்தியானந்தா.. ஆனால் தற்போது வரை கைலாசா எந்த நாட்டின் பக்கத்தில் இருக்கிறது என்பது பற்றி நித்தியானந்தா வாய் திறக்கவில்லை.
இந்த நிலையில், கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக நித்தியானந்தா கூறியிருக்கிறார்.
அதாவது வரும் 21 ஆம் தேதி கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கும் பதிவில் :-
அதில், 'கைலாசா திறக்கப்பட்டுள்ளது. வருகிற 21 ஆம் தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம், 'கைலாசா வாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு ஒரு இணையதள லிங்க் மற்றும் வாட்ஸ் அப் எண் ஆகியவற்றையும் பகிர்ந்துள்ளனர்.
நித்தியானந்தா வெளியிட்டுள்ள காணொளியில், கைலாசா திறக்கப்பட்டுள்ளது.. மனித உடலெடுத்த எல்லோருக்கும் அழைப்பு விடுக்கிறேன். கைலாசாவின் கதவுகள் திறந்து இருக்கின்றன. கதவை நான் திறந்தாலும் நீங்கள் கால் எடுத்து வைத்தால்தான் உள்ளே வர முடியும்" என்று கூறியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *