சீனாவில் கனடா நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை!

top-news
FREE WEBSITE AD

சீனாவில் கனடா நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனாவில் போதைப் பொருள் வழக்கில் கைதான 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த 4 பேரை பற்றிய தகவல்கள் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க வெளியிடப்படவில்லை. ஆனால், அவர்கள் நால்வரும் சீனா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமை பெற்றிருந்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுகையில், இந்த வழக்கை அவர் கடந்த சில மாதங்களாக பின் தொடர்ந்து வந்ததாகவும், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிடோரிடம் அந்த நால்வரையும் அவர்களது தண்டனையிலிருந்து காப்பாற்ற முறையிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த தண்டனையானது அடிப்படை மனித கண்ணியத்துக்கு முரணானது என்று தனது கண்டனங்களை அவர் தெரிவித்துள்ளார்.இதற்கு பதிலளித்து பேசிய கனடாவின் சீன தூதரக பிரதிநிதி, தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நால்வரின் குற்றங்களுக்கும் தகுந்த ஆதாரங்கள் உள்ளது என்றும் இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துக்களை கூறாமல் சீனாவின் சட்டத்தை மதிக்குமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல், ஊழல் மற்றும் உளவு போன்ற குற்றங்களில் கைதானோருக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், வெளி நாட்டவருக்கு விதிக்கப்படும் மரண தண்டனை மிகவும் அரிதாகவே நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகின்றது.இருப்பினும், போதைப் பொருள் வழக்கு போன்ற கடுமையான குற்றங்களில் கைதானவர்களின் இரு நாட்டு குடியுரிமைகள் சீனாவில் அங்கீகரிக்கப்படுவதில்லை. தற்போது நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகள் குறித்து சர்வதேச அளவிலான ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கனடா நாட்டைச் சேர்ந்த ராபர்ட் லோயட் ஷெல்லென்பெர்க் என்பவருக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவரது தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது, கடந்த 2018 ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த மெங் வான்சோ என்பவரை அமெரிக்காவின் வேண்டுகொளுக்கு இணங்க கனடா கைது செய்து நாடு கடத்தியது முதல் விரிசலடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *