சென்னை விமான நிலையத்திலேயே கடை போட்டு 267 கிலோ தங்கம் கடத்திய யூடியூபர் கைது!
- Muthu Kumar
- 03 Jul, 2024
கடந்த வாரம் துபாயில் இருந்துடிரான்சிட் பயணியாக சென்னை வந்த இலங்கையை சேர்ந்த இளைஞர்ஒருவர், விமான நிலைய கழிப்பறைக்கு சென்று தங்கத்தை மறைத்து வைத்துவிட்டு மற்றொரு விமானத்தில் இலங்கை செல்ல காத்திருந்தார். இதனை உறுதி செய்த அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், அவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் விமான நிலைய பன்னாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையை மையமாக வைத்து இந்தக் கடத்தல் கடந்த 2 மாதங்களாக நடந்து வருவது தெரியவந்தது.
விசாரணையில், சென்னையைச் சேர்ந்த யூடியூபர் சபீர் அலி என்பவர், கடந்த 2 மாதங்களாக பன்னாட்டு முனைய புறப்பாடு பகுதியில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை உரிய அனுமதியுடன் நடத்தி வருவதும், கடையில் பணிக்கு 7 பேரை அமர்த்தியிருப்பதும், அவர்கள் அனைவருக்கும் சென்னை விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதற்கான சிறப்பு அனுமதியுடன் பிசிஏஎஸ் பாஸ் வாங்கியிருப்பதும் தெரியவந்தது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து டிரான்சிட் பயணிகள் சிலர் கடத்தி கொண்டு வரும் தங்கத்தை, விமான நிலைய பாதுகாப்பு பகுதியிலுள்ள கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு, சபீர் அலிக்கு தகவல் தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர். சபீர் அலி, தனது கடையில் உள்ள ஊழியர்களை அனுப்பி, அந்த தங்கத்தை உள்ளாடைகளுக்குள் அல்லது உடலின் பின் பகுதிக்குள் மறைத்து வைத்து சுங்கச்சோதனை இல்லாமல் வெளியே கொண்டு சென்று கடத்தல் கும்பலிடம் கொடுப்பது தெரியவந்தது.
2 மாதங்களாக சுமார் ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பதால், கடையை நடத்தி வரும் சபீர் அலி, பணியாற்றும் 7 ஊழியர்களையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சபீர் அலி கடையை தொடங்கவும், ஊழியர்களுக்கு பாஸ் வாங்கவும் என அனைத்து வகையிலும் உதவியாக இருந்த விமான நிலைய அதிகாரி உள்ளிட்ட சிலரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், கடத்தப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *