ஓபன் ஏஐ நிறுவனத்தின் ஜான் லீக் பதவி விலகல்!

top-news
FREE WEBSITE AD

சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருந்து வரும் ஜான் லீக் என்பவர் விலகியுள்ளார்.

இதற்கிடையே தனது பதவி விலகலுக்கு அவர் கூறியுள்ள காரணம் தான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

இப்போது உலகில் எங்குத் திரும்பினாலும் ஏஐ தான்.. உலகம் எப்படி இயங்குகிறது என்பதையே இந்த ஏஐ மொத்தமாக மாற்றும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 

ஏஐ துறை இந்தளவுக்கு முக்கியத்தவம் பெற சாட் ஜிபிடி தான் முக்கிய காரணம்.. சாட் ஜிபிடியின் வெற்றி என்பது ஏஐ துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது என்றே சொல்லலாம்.

 இதற்கிடையே ஓபன் ஏஐ நிறுவனத்தின் சூப்பர் அலைன்மென்ட் என்ற பிரிவின் தலைவர் ஜான் லீக் அந்நிறுவனத்தில் இருந்து பதவி விலகியுள்ளார். ஓபன் ஏஐ நிறுவனத்தில் ஆராய்ச்சி பிரிவில் முக்கிய பதவியில் இருந்த இவர் பதவி விலகி இருப்பது  முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்து விலகியதை ஜான் லீக் - எக்ஸ் தளத்தின் மூலம் உறுதி செய்துள்ளார்.


ஜான் லீக் தலைமையிலான குழு தான் சாட் ஜிபிடியில் கடந்த 3 ஆண்டுகளாகப் பல ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டு இருந்தது. சாட்ஜிபிடி இப்போது இந்தளவுக்கு வெற்றியடைய அவர்கள் செய்த இந்த ஆய்வுகளே முக்கிய காரணமாகும். தனது குழுவில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜான் லீன், தனது குழு உறுப்பினர்களின் புத்திசாலித்தனம் மற்றும் செயல்திறன் தன்னை வியக்க வைப்பதாக அவர் தெரிவித்தார்.

 இதுவரை எல்லாமே ஓகே தான்.. ஆனால், தனது குழுவை தாண்டி ஓபன் ஏஐ நிறுவனத்தின் கொள்கைகள் குறித்து அவர் கூறியுள்ள கருத்துகள் தான் இப்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஓபன் ஏஐ நிறுவனம் தனது முக்கிய முன்னுரிமைகளில் இருந்து விலகிச் செல்ல தொடங்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், "நம்மை விடப் புத்திசாலித்தனமாக இருக்கும் ஏஐ கருவிகளை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் நாம் உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

 அடுத்த தலைமுறை ஏஐ மாடல்களில் பாதுகாப்பு, கண்காணிப்பு முறையாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார். இருப்பினும், இவை பெரும்பாலும் கவனம் பெறுவதில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.  மேலும் இந்த பிரச்சனைகளைச் சரிசெய்வது மிகவும் கடினம். குறிப்பாக இந்த பிரச்சினைகளைச் சரி செய்யும் பாதையில் நாம் இல்லை என்பதே என் கவலை என்று பதிவிட்டுள்ளார்.


மனிதர்களை விடப் புத்திசாலித்தனமான இயந்திரங்களை உருவாக்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.. இதுபோன்ற ஏஐ மாடல்களை உருவாக்குவதால் ஓபன் ஏஐ நிறுவனம் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்பு செயல்முறைகளில் கவனம் செலுத்துவதை விட மக்களைக் கவரும் விஷயங்களுக்கு மட்டுமே ஓபன் ஏஐ முக்கியத்துவம் தருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். ஓபன் ஏஐ பயனாளர்களுக்கு அவர் கடைசியாக "உலகம் உங்களை நம்புகிறது" என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே சாட்ஜிபிடி போன்ற ஏஐ மாடல்களால் உலகிற்கு பேராபத்து ஏற்படலாம் என்று ஒரு தரப்பு ஆய்வாளர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதே காரணத்தைச் சொல்லி ஜான் லீக் தனது பதவி விலகி இருப்பது உலகளவில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *