இந்திய சீன எல்லையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

top-news
FREE WEBSITE AD

கல்வான் மோதலை தொடர்ந்து இந்தியா சீனா எல்லையில் கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கு நிலவி வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்த விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே வீரர்களை வாபஸ் பெறுவதில் உடன்பாடு ஏற்பட்டது. இந்தச் சூழலில் இப்போது எல்லையில் சத்தமின்றி சில மாற்றங்கள் நடக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு இந்தியா சீனா எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் வெடித்தது. இதனால் இந்தியா சீனா எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இரு தரப்பும் தங்கள் வீரர்களை எல்லையில் குவித்தனர்.

மேலும், அங்குத் தற்காலிக கூடாரங்கள் அமைத்து வீரர்கள் தங்கினர். இதனால் எல்லையில் நடக்கும் வழக்கமான பணிகள் அனைத்தும் தடைப்பட்டன. ரோந்து பணிகள் கூட முறையாக நடக்கவில்லை.

இந்த பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வர இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் இந்த பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் இருந்த போதிலும், அதன் பிறகு பெரியளவில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பிற்கும் இடையே இந்த மோதலில் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து எல்லையில் மெல்ல மாற்றம் நடக்கத் தொடங்கியுள்ளது.

கிழக்கு லடாக்கில் எல்ஏசி எனப்படும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் இரு தரப்பும் தங்கள் வீரர்களை வாபஸ் பெறத் தொடங்கியுள்ளனர். அதன்படி இரு தரப்பும் தங்களின் ஒரு கூடாரம் மற்றும் சில தற்காலிக கட்டமைப்புகளை அப்பகுதியில் இருந்து அகற்றியுள்ளனர். மேலும், இந்திய வீரர்கள் சார்டிங் நாலாவின் மேற்குப் பகுதிக்குத் திரும்பும் அதேநேரம் சீன வீரர்கள் நாலாவின் கிழக்குப் பகுதிக்குத் திரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது..எல்லையில் இரு தரப்பிலும் சுமார் 10 முதல் 12 தற்காலிக கட்டமைப்புகள் மற்றும் சுமார் 12 கூடாரங்கள் உள்ளன. அவை வரிசையாக ஒவ்வொன்றாக அகற்றப்படும் எனத் தெரிகிறது.

இந்த ராணுவ கட்டமைப்புகள் மட்டுமின்றி சீன ராணுவம் அப்பகுதியில் உள்ள தங்கள் வாகனங்களின் எண்ணிக்கையையும் குறைத்தது. அதற்குப் பதிலாக இந்திய ராணுவமும் சில படைகளைத் திரும்பப் பெற்றது. இந்த செயல்முறை முடிந்ததும், அடுத்த 4, 5 நாட்களில் எல்லையில் உள்ள டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் ரோந்து பணிகள் தொடங்கும் என்று ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

கல்வான் மோதலுக்குப் பிறகு ஏற்பட்ட பதற்றத்தைத் தடுக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்த நிலையில், கடந்த அக். 21ம் தேதி இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக இந்தியா அறிவித்தது. அதற்கு மறுநாள் சீனாவும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த விவகாரத்தில் சில தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் இதை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று சீனா அறிவித்தது. இரு தரப்பிற்கும் இடையே மோதல் நீடித்த நிலையில், இது முக்கிய திருப்பமாகப் பார்க்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யா சென்றிருந்தார். அந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கலந்து கொண்டார். சரியாக இந்த மாநாட்டிற்கு முன்னதாக தான் இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *