சென்னையில் இரானி கொள்ளையர்கள்-சென்னை காவல் ஆணையர் அருண்!

- Muthu Kumar
- 26 Mar, 2025
பவாரியா கொள்ளையர்களை போல் சென்னையில் இரானி கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சென்னையில் நடந்த 6 செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது இரானி கொள்ளையர்கள் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த இரானி கொள்ளையர்கள், தனித்தனியே விமானத்தில் வந்து கொள்ளையில் ஈடுபட்டு தனித் தனியே விமானத்தில் திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அ.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பவாரியா கொள்ளையர்கள் என்று அட்டகாசமான கதையை சொல்லி இருப்பார். அதில் தமிழ்நாட்டில் நடந்த கொள்ளைகளுக்கும், கொலைகளுக்கும் பின்னுள்ள விசாரணை மற்றும் காரணங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சென்னையில் இரானிய கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நேரத்தில் 6 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமானம் மூலமாக தப்பிக்க முயன்ற வடமாநில கொள்ளையனை போலீசார் மடக்கி பிடித்தனர். அதேபோல் ரயில் மூலமாக தப்பிக்க முயன்ற இன்னொரு கொள்ளையனையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இன்று காலை செயின் பறிப்புக்கு மூளையாக இருந்த ஜாபர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்ல தயாரான இருவருரை கைது செய்தோம். அதேபோல் ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் போலீசார் மடக்கினர்.
அவர்கள் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை அடையாளம் காட்ட தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்து சென்றோம். அப்போது அவர்கள் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காவல்துறையினர் மீது சுட்டனர். அதில் அதிர்ஷ்டவசமாக எந்த போலீசாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன்பின் தற்காப்புக்காக ஜாபரை என்கவுன்ட்டர் செய்தனர். அதில் ஜாபர் உயிரிழந்தார்.
கொள்ளையர்கள் செயின் பறிப்பதற்கு ஈடுபடுத்திய வாகனம் கர்நாடக மாநில பதிவெண் கொண்டது. இவர்கள் வடமாநிலத்தின் மிகப்பெரிய கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள். இவர்கள் மீது ஏராளமான வழக்குகள் இருக்கின்றன. கைது செய்யப்பட்ட இருவரும் தனித் தனியே சென்னைக்கு விமானம் மூலம் வந்து, கொள்ளையடித்த பின் மீண்டும் தனித்தனியே விமானத்தில் தப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து மொத்தமாக 26 பவுன் மதிப்புள்ள ஆறு செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவருமே இரானி கொள்ளையர்கள் தான். இவர்கள் மீது நாடு முழுக்க 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மக்களின் கவனத்தை திசை திருப்பி நகை பறிப்பில் ஈடுபடுவதே இரானி கொள்ளையாகும். இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் நபர்களுக்கு தொடர்பு இல்லை.
சிசிடிவி காட்சிகளை வைத்தே குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்தோம். இரானி கொள்ளையர்கள் மும்பை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள். செயின் பறிப்பில் ஈடுபடுவதற்கு முன் கூட்டியே ஒருவர் சென்னை வந்து கொள்ளையடிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *