ஜப்பானில் பரவி வரும் STSS எனும் அரிய வகை நோயால் பெரும் ஆபத்து!

top-news
FREE WEBSITE AD

உலகையே உலுக்கிய கொரோனாவின் மரண ஓலம் சற்று ஓய்ந்துள்ள வேளையில், ஜப்பான் நாட்டு மக்களுக்கு பேரிடியாய் இறங்கியுள்ளது STSS எனப்படும் அரிய வகை நோய். காரணம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட பல மாதங்கள் உயிர் வாழ்ந்த நிலையில், இந்த வகை நோய், தாக்கிய இரண்டே நாட்களில் உயிரைக் கொல்லும் என்பதுதான்.

streptococcal toxic shock syndrome என அழைக்கப்படும் இந்த வகை அரிய நோய் ஜப்பான் நாட்டில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோயானது, உடல் பகுதியை சாப்பிட கூடிய பாக்டீரியாவால் ஏற்பட கூடியது என்பதை மருத்துவ வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டு 48 மணி நேரத்தில் உயிரிழக்கக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்திருப்பது, ஜப்பான் மட்டுமின்றி, உலக நாடுகளை ஒரு கனம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ஜப்பானில் கடந்த ஜூன் 2 ஆம் தேதிவரை இந்த வகை அரிய நோயால் 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 941 ஆக இருந்ததாகவும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நோயின் தாக்கத்தை கடந்த 1999 ஆம் ஆண்டில் இருந்து கண்காணித்து வருவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

குறிப்பாக group A Streptococcus எனப்படும் GAS வகை நோய், அதிகப்படியான மரணங்களை ஏற்படுத்தும் என்றும், இந்த வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் தீவிரமாக பரவும் என்பதையும் மருத்துவ வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

மூட்டு வலி, தொண்டையில் வீக்கம் அல்லது புண், குமட்டல், வாந்தி உள்ளிட்டவை இந்த அரிய வகை நோயின் முதற்கட்ட அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் என்றும், இதனைத் தொடர்ந்து சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டு, உடல் உறுப்புகள் செயலிழந்து மரணிக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வகை நோய் முதியவர்களை அதிகம் தாக்கும் என்றும், குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகம் தாக்கும் தன்மை கொண்டது.

இந்த நோய் தாக்கப்பட்ட 48 மணிநேரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டு விடும் என டோக்கியோ மகளிர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்களுக்கான பேராசிரியர் கென் கிகுசி கூறியுள்ளார். காலையில் நோயாளியின் காலில் வீக்கம் கண்டறியப்பட்டால், மதியம் அது முழங்காலுக்கும் பரவி, 2 நாட்களில் அவர்கள் உயிரிழந்து விடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் இந்த விகிதத்தில் பரவி வரும் தொற்றுகளால் நடப்பு ஆண்டில் பாதிப்பு எண்ணிக்கை 2,500 ஆக அதிகரிக்க கூடும் என்றும், 30 சதவீதம் அளவுக்கு இறப்பு விகிதம் இருக்க கூடும் என்றும் கிகுசி கூறியுள்ளார். இந்த அரிய வகை நோய் பரவாமல் இருக்க, கைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஜப்பானை தவிர்த்து, இந்த அரிய வகை நோயின் அறிகுறிகள் 5 ஐரோப்பிய நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நோய் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவாமல் இருக்க கட்டுப்பாடுகளை கொண்டுவர உலக சுகாதார அமைப்பு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *