ஹோலி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் மதியம் 2 மணிக்கு தொழுகை!

- Muthu Kumar
- 13 Mar, 2025
ஹோலி பண்டிகையை முன்னிட்டு உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் வெள்ளிக்கிழமை தொழுகை மதியம் 2 மணிக்கு மேல் நடைபெறும் என அந்த நகரத்தின் முஸ்லிம் மத குரு அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ரமலான் மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமையன்று ஹோலி வருகிறது. ஹோலி பண்டிகையும் வெள்ளிக்கிழமை தொழுகையும் ஒரே நேரத்தில் வருவதால் உபியின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்,அயோத்தியில் உள்ள சென்ட்ரல் மசூதியின் தலைமை மத குரு முகமது ஹனீப் கூறுகையில்,''ஹோலி கொண்டாட்டங்களுக்கு ஏற்றவாறு ஜும் ஆ தொழுகைக்கான நேரம் மாற்றி அமைக்கப்படும். ஹோலி பண்டிகையின் நேரத்தைக் கருத்தில் கொண்டு, ஜும்ஆ தொழுகை மாலை 4.30 மணி வரை இருப்பதால், அனைத்து மசூதிகளும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு ஜும்ஆ தொழுகையை நடத்துமாறு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்.
ஹோலி பண்டிகையின் போது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் பொறுமையாகவும், தாராள மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும். யாராவது அவர்களுக்கு வண்ணங்களைப் பூசினால், அவர்கள் புன்னகையுடன் பதிலளித்து அன்பு மற்றும் மரியாதையின் உணர்வில் ஹோலி வாழ்த்துக்கள் கூற வேண்டும்'' என்றார்.
அதே போல் லக்னோ ஈத்கா மசூதியின் இமாம் ஜூம் ஆ தொழுகையை 2 மணிக்கு மேல் நடத்தும் படி கேட்டு கொண்டுள்ளார். சம்பல் நகரில் மதியம் 2.30 மணிக்கும் ஜூம் ஆ தொழுகையை நடத்துவதற்கு முஸ்லிம்கள் முடிவு செய்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *