நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி-பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா!

- Muthu Kumar
- 05 Dec, 2024
பிரான்ஸ் நாட்டின் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து அந்நாட்டு அரசு கவிழ்ந்தது.
இது மிகப்பெரிய அளவில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1962 ஆம் ஆண்டுக்குப் பின் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரான்ஸ் நாட்டில் அரசு கவிழ்வது இதுவே முதல்முறையாகும். கடந்த செப்டம்பர் மாதம் தான் அந்நாட்டின் பிரதமராக மைக்கேல் பார்னியர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் 3 மாதங்களுக்குள் அவர் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் நடப்பாண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்நாட்டின் அதிபரான இம்மானுவேல் மேக்ரோன் முன்கூட்டியே நாடாளுமன்றத்திற்கு தேர்தலை நடத்தினார். இந்த தேர்தலில் மேக்ரோனின் மையவாத கூட்டணி, இடதுசாரிகள் மற்றும் அதை தீவிர வலதுசாரிகள் கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் அதிதீவிர வலதுசாரிகளின் தேசிய பேரணி கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவரை தேர்வு செய்ததற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து போராட்டங்களும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தான் பிரதமர் மைக்கேல் பார்னியர் 2025 ஆம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு பட்ஜெட்டை பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் எப்படியும் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அனுமதியுடன் பட்ஜெட்டை நிறைவேற்றுவேன் என மைக்கல் பார்னியர் உறுதியாக தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தின் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில் எதிர்பாராதவிதமாக மைக்கல் பார்னியர் தோல்வி அடைந்ததார். இதனைத் தொடர்ந்து அவர் ஆட்சியை பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக ஒரு பிரதமரின் ஆட்சி பிரான்ஸ் நாட்டில் கவிழ்க்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததால் தனது பிரதமர் பதவியை மைக்கேல் பார்னியர் உடனடியாக ராஜினாமா செய்தார். இது அதிபரான இம்மானுவேல் மேக்ரோனுக்கு பின்னடைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமரை இம்மானுவேல் மேக்ரோன் இன்று அல்லது நாளைக்குள் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற 228 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் 331 பேர் வாக்களித்துள்ளனர்.
இதனிடையே சவுதி அரேபியாவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் இன்று மாலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசை பொறுத்தவரை மக்கள் அதிபருக்கும், பிரதமருக்கும் தனித்தனியாக வாக்களிப்பதால் இந்த நம்பிக்கையில்லா தீர்மான முடிவு இம்மானுவேல் மேக்ரோனுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் இந்த வார இறுதியில் பாரீஸ் வர உள்ளார். அதற்குள் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்நாட்டு சட்டத்தின் படி ஜூலை மாதம் வரை புதிய நாடாளுமன்ற தேர்தலில் நடத்த முடியாது என்பதால் தற்காலிக பிரதமராக யார் வரப்போகிறார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *