காட்டிக்கொடுக்கும் செயலில் மாந்தநேய திராவிடர் கழகம் செயல்படலாமா?

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 16-
 தமிழ்ப்பள்ளிகளில் இந்து சமயம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படக் கூடாது என்று மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம் சமூக வலைத்தளத்தில் கூறிய கருத்துகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் கண்டனங்களும் எழுந்துள்ளன.
இது தொடர்பாக மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் தலைவர் நாக பஞ்சு, தமிழ் மலருக்கு பதில் அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அந்த அறிக்கை அப்படியே இங்கு வெளியிடப்படுகிறது. அந்த அறிக்கையில் நாக பஞ்சு தெரிவித்துள்ள சில கருத்துகளுக்கு தமிழ் மலர் விளக்கம் கேட்க விரும்புகிறது.
அதற்கு முன்பாக மாந்தநேய திராவிடர் கழகத்தின் கருத்துகளால் மாவட்ட கல்வித்துறையினர் தமிழ்ப்பள்ளிகளுக்குச் சென்று ஆய்வொன்றை நடத்தியிருப்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

தமிழ்ப்பள்ளிகளில் இந்து சமய நிகழ்ச்சிகள் நடப்பதாக கல்வித் துறைக்கு மாந்தநேய திராவிடர் கழகம் புகார் அளித்ததன் அடிப்படையிலேயே மாவட்ட கல்வித்துறை பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
மாவட்ட கல்வித்துறையினர் சில பள்ளிகளுக்குச் சென்று தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர். மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் இந்த காட்டிக்கொடுக்கும் செயலுக்கு என்ன காரணம்? தமிழ்ப்பள்ளிகளில் காலங்காலமாக சமய நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல. 
திடீரென்று மாந்தநேய திராவிடர் கழகம் சமய விவகாரங்களில் மூக்கை நுழைத்திருப்பது ஏன் என்பதுதான் கேள்வியாகும். 
இது ஒருபுறமிருக்க நாகபஞ்சு என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
 “வாரக்கணக்கில் கொலு வைத்து தொடர்ந்து பூசனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அது மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்கு நிச்சயம் ஊறு விளைவிக்கும் என்பதை கல்வி அமைச்சின் கவனத்திற்கு மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் கொண்டு செல்லும் என்று வலியுறுத்திக் கூறினோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
நம்முடைய கேள்வி, கல்வி அமைச்சுக்கு இதை வலியுறுத்திக் கூற வேண்டிய அவசியம் மாந்தநேய திராவிடர் கழகத்திற்கு என்ன வந்தது?  அது மட்டுமல்ல அவருடைய அறிக்கையில்
 “தமிழ்ப்பள்ளிகளை வழிபாட்டுத் தலங்களாக மாற்றும் வேலை நடைபெறுவது மிகவும் வருத்தத்திற்குரியது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நம்முடைய கேள்வி இதுதான், திடீரென்று மாந்தநேய திராவிடர் கழகத்திற்கு வருத்தம் ஏற்பட்டதற்கு என்ன காரணம்? அது மட்டுமல்லாது தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் வழிபாட்டு முறையை தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களே புறக்கணிக்கின்றனர் என்று கூறியிருக்கிறார் இந்த நாக பஞ்சு.
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்தும் செயலை நாக பஞ்சு தொடர்ந்திருப்பது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது. அது மட்டுமல்ல, மேலும் அவரது அறிக்கையில்
“ பள்ளி மண்டபங்களில் அலைமகள், மலைமகள், கலைமகள் என்று ஒவ்வொருவருக்கும் மூன்று நாட்கள் என 9 நாட்களுக்கு கொலு வைத்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் வழிபாட்டைப் போல் சமய விழாக்களைக் கொண்டாடுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார். 

நம்முடைய கேள்வி என்னவென்றால் தமிழும் சமயமும் தழைத்தோங்க வேண்டும் என்பதுதான் நமது மரபும் நெறியுமாகும். அப்படியிருக்கையில், பள்ளிகளில் சமயம் போதிப்பது எப்படி தவறாகும்?  என்பதை நாக பஞ்சு அறியாமல் போனது ஏன் என்பதுதான் வியப்பாக இருக்கிறது.
ருக்குன் நெகாராவின் கோட்பாடுகளில் முதல் கோட்பாடான “ இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்” எனும் வரியை மாந்தநேய திராவிடர் கழகம் அறிந்து வைத்துள்ளதா? அல்லது அறிந்தும் அறியாதது போல் இந்த நாட்டில் செயல்படுகிறதா என்பதை நாக பஞ்சுதான் விளக்க வேண்டும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *