அடிப்படை அறிவற்ற பினாங்கு ம.இ.கா! – சதீஸ்முனியாண்டி சாடல்!
- Thina S
- 09 Oct, 2024
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தைத்
தோற்றிவித்த பெருமை ம.இ.காவுக்கு உள்ளது என பினாங்கு
மாநில ம.இ.கா தலைவர் டத்தோ தினகரன் குறிப்பிட்டிருப்பது அடிப்படை அறிவற்ற செயல் என
பினாங்கு இந்து அறநிலைய வாரியத்தின் முன்னாள் பொறுப்பாளரும்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் உரிமை கட்சியின் செயலாளருமான சதீஸ் முனியாண்டி
சாடினார். டத்தோ தினகரன் குறிப்பிடுவது போல, பினாங்கு இந்து
அறநிலைய வாரியம் பாரிசான் தலைமைத்துவத்தில் ம.இ.காவின் முயற்சியால்
உருவாக்கப்பட்டது என வரலாற்றைத் தவறாகச் சித்தரிக்கும் போக்கு கண்டிக்கத்தக்கதாகவும்
சதீஸ் முனியாண்டி தெரிவித்தார்.
பினாங்கு இந்து அறநிலையம் 1905 ஆம் ஆண்டு காலனித்துவச் சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட வாரியம். மாநில ஆளுநர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு வாரியம் பினாங்கு இந்து அறநிலைய வாரியம். அதன் பின்னர் சுதந்திர மலேசியாவின் கூட்டாட்சிச் சட்டத்தின் கீழ் உள்ள வாரியமாக பினாங்கு இந்து அறநிலைய வாரியம் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருந்தாலும் அதனை முழுமையாக நிர்வகிக்கும் பொறுப்பு மாநில அரசாங்கத்திடமே இருந்தது. ம.இ,கா தோற்றுவிக்கப்பட்டது 1946 ஆம் ஆண்டு. பாரிசான் தோற்றுவிக்கப்பட்டது 1973 ஆம் ஆண்டு, பினாங்கு இந்து அறநிலைய வாரியம் சட்டப் பூர்வமாக 1905 ஆம் ஆண்டு முதலே செயல்பாட்டில் இருக்கிறது. அடிப்படை புரிதலும் அடிப்படை அறிவும் இல்லாது ம.இ.காவின் டத்தோ தினகரன் இவ்வாறு குறிப்பிடுவது நகைச்சுவையின் உச்சம் என சதீஸ் முனியாண்டி தெரிவித்தார்.
இதுமட்டுமல்ல, முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி 2008 ஆம் ஆண்டு முதல்
பினாங்கு இந்து அறநிலைய வாரியத்தின் தலைவராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்
பினாங்கு மாநில ம.இ.கா தலைவரான டத்தோ தினகரன், அதுவும் தவறு.
பேராசிரியர் இராமசாமி 2010 ஆம் ஆண்டு பினாங்கு இந்து அறநிலைய வாரியத்தின் தலைவராக
நியமிக்கப்பட்டார். இதெல்லாம் அடிப்படை அறிவுள்ள அனைவரும் அறிந்திருக்கும்
செய்திகள், இதைக் கூட அறிந்திருக்காமல் ம.இ.காவின் மாநிலத்
தலைவராக டத்தோ தினகரன் இருப்பது நகைப்பானது என சதீஸ் முனியாண்டி சாடினார்.
2008 ஆம் ஆண்டு வரையில் ம.இ.கா
நிர்வகித்து வந்த பினாங்கு இந்து அறநிலைய வாரியத்தில் 4000 ரிங்கிட் மட்டுமே வைப்பு நிதியாக இருந்ததை ம.இ.கா மறக்க கூடாது, மேலும், ம.இ.காவிடம் இருந்த வாரியங்கள் பலவும்
காணாமல் போனதை வரலாறு அறியும்,. 4000 ரிங்கிட்டுடன்
ஒப்படைக்கப்பட்ட பினாங்கு இந்து அறநிலைய வாரியம் தற்போது மில்லியன் சொத்துகளுடன்
இருக்கிறது, இனி பினாங்கு இந்து அறநிலைய வாரியம் எவ்வாறு
செயல்படும் என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் வாரியம் தொடர்பாகக் கருத்து
தெரிவிக்குமுன் குறைந்தபட்ச அறிவுடனும் தேடலுடனும் கருத்து தெரிவிக்கும்படி
பினாங்கு இந்து அறநிலையத்தின் முன்னாள் பொறுப்பாளரும்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் உரிமை கட்சியின் செயலாளருமான சதீஸ் முனியாண்டி
பினாங்கு மாநில ம.இ.கா தலைவருக்கு நினைவூட்டினார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *